Header Ads

சித்தராமையாவுடன் நடிகர் கமலஹாசன் இணைந்து தொடங்கி வைக்கும் சர்வதேச திரைப்படத்திருவிழா

கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் நடைபெற உள்ள ஆறாவது சர்வதேசத் திரைப்படத் திருவிழா இன்று மாலை தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியினை மாநில முதலமைச்சர் சித்தராமையாவுடன் நடிகர் கமல்ஹாசன் இணைந்து துவக்கி வைக்கின்றார். மத்தியக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஞானஜோதி ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் இந்த விழா துவங்குகின்றது.  

இந்நிகழ்ச்சியில் ஈரானியத் திரைப்படத் தயாரிப்பாளர் போரான் டெரக்ஷண்டே, ஜெர்மனியின் ஹோஃப் திரைப்பட விழாவின் இயக்குநர் ஹெய்ன்ஸ் ஜார்ஜ் படேவிடாஸ், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளான அம்பரீஷ், உமாஸ்ரீ, ராதிகா பண்டிட், சுதீப், ரம்யா ஆகியோர் கலந்துகொள்ளுகின்றனர். 

முதலமைச்சருடன் அவரது அமைச்சரவையின் பிற சகாக்களும் இந்தத் துவக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 52 நாடுகளிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. இவை ஃபன் சினிமா, லிடோ ஐநாக்ஸ், சுலோச்சனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய திரையரங்குகளில் நாளை முதல் 2 ஆம் தேதி வரை 230 காட்சிகள் திரையிடப்படும். 

இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் டாக்டர். ராஜ்குமார் மற்றும் பிமல்ராயின் திரைப்படங்களும் இந்தத் திருவிழாவில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் நடைபெற உள்ள இந்தத் திரைப்படத் திருவிழாவில் 2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், 1,000க்கும் மேற்பட்ட பிரமுகர்களும் கலந்துகொள்ளுகின்றனர் என்று இவ்விழாவின் கலை இயக்குனரான எச்.என்.நரஹரி ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.