அதிகாரங்களை வழங்க மறுக்கும் ஆளுநர்களுக்கு ஜனாதிபதியும் உடந்தை என்கிறார் சுரேஸ் எம்பி.
வடக்கு கிழக்கு மாகாண மக்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பதால் அந்த மாகாணங்களின் ஆளுநர்கள், மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை வழங்க மறுக்கின்றனர். இதற்கு ஜனாதிபதியும் உடந்தையாக இருக்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் 13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்களின் படி செயற்படுவதாக தெரிவித்துள்ளது குறித்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரிடம் 13வது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டும். 13வது அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மாகாண முதலமைச்சருக்கென அதிகாரங்கள் இருக்கின்றன. ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இருக்கின்றன.
ஜனாதிபதியின் பிரதிநிதியான தனக்கு சகல அதிகாரங்களும் இருக்கின்றதென நினைத்துக் கொண்டு வடமாகாண ஆளுநர் செயற்படுகின்றார். முதலமைச்சருக்கு அமைச்சுக்களின் செயலாளர்களைக் கூட நியமிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.
ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென உண்மையில் நினைப்பாரேயானால், மாகாண சபைக்குள் அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். மேலும் மேலதிக அதிகாரங்கள் தேவையெனக் கருதும் பட்சத்தில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபை அதிகாரங்கள் குறித்து ஜனாதிபதிக்கு மூன்று கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இக் கடிதங்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: