தென்ஆப்பிரிக்கா சவாலை இந்திய அணி சமாளிக்குமா?: முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 0–2 என்ற கணக்கில் இழந்தது.
இந்தியா– தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரையாவது கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை என்பதால் முதல் முறையாக வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது மிகவும் சவாலானது. ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய வீரர்கள் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சில் திணறினார்கள். அதிவேகமாக பவுன்ஸ் ஆகக்கூடிய அங்குள்ள ஆடுகளங்களில் விளையாட இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் டெஸ்டில் தோல்வியை தவிர்க்கவே கடுமையாக போராட வேண்டும்.
தெண்டுல்கரின் இடமான 4–வது வீரர் வரிசையில் வீராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆடுவார்கள். ரகானேவுக்கும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இருக்கும்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்ற ஜாகீர்கான் பந்து வீச்சில் முத்திரை பதிக்கலாம். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது. இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரில் இருவர் இடம் பெறுவார்கள்.
புவனேஸ்வர்குமார் கழற்றிவிடப்படலாம் என்று தெரிகிறது. சுழற்பந்தில் அஸ்வின் மட்டுமே இடம் பெறுவார்.
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. கேப்டன் சுமித், ஹசிம் அம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், பிலாண்டர் போன்ற சிறந்த வேகப்பந்து வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:–
இந்தியா: டோனி (கேப்டன்), முரளிவிஜய், ஷிகார் தவான், புஜாரா, வீராட் கோலி, ரோகித் சர்மா, ரகானே, ஜடேஜா, அஸ்வின், ஜாகீர்கான், இஷாந்த்சர்மா, புவனேஸ்வர்குமார், உமேஷ் யாதவ், விர்த்திமான் சகா, முகமது ஷமி, ஒஜா, அம்பதி ராயுடு.
தென்ஆப்பிரிக்கா: சுமித் (கேப்டன்), ஹசிம் அம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன், டுபெலிசிஸ், ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், பிலாண்டர், இம்ரான் தாகீர், ராபின் பீட்டர்சன், எல்கர், கெல்வின் வெல்ட், தாமி சோல்கிளே.
No comments: