திருமணமான 2 மாதத்தில் கணவன்–மனைவி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுக்குழிபட்டி சோளகுளத்துபட்டியை சேர்ந்தவர் பூசாரி அம்பலம். இவரது மகன் முருகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும், மார்க்கம்பட்டி அருகில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த லலிதா(24) என்ற பெண்ணிற்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் லலிதாவுக்கு மார்பில் கட்டி ஏற்பட்டுள்ளது. வேதனையால் அவதிப்பட்ட மனைவியை முருகன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். அதில் குணமாகவில்லை.
இதையடுத்து வேறு பல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. அதன்பின்னர் முருகன், மனைவியுடன் கோவில்களுக்கு சென்று மந்திரித்துள்ளார். எந்தவொரு வகையிலும் நோய் குணமாகாததால் மனம் உடைந்தனர்.
தங்களுக்கு இல்லற சுகத்தை தர முடியாத நான் உயிருடன் இருந்து பலன் இல்லை. எனவே இறந்துபோகிறேன் என்று லலிதா கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு முருகன் உன்னை விட்டு நான் மட்டும் எப்படி தனியாக வாழ்வேன் என்றார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கணவன்–மனைவி 2 பேரும் சேர்ந்து ஒன்றாகவே தற்கொலை செய்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று ஆஸ்பத்திரி செல்வதாக கூறி சென்ற அவர்கள் கன்னியாபுரம் அருகே எல்லப்பட்டியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் முருகனின் பெற்றோர்கள் தேடி அலைந்தனர். விசாரித்ததில் அவர்கள் ஆஸ்பத்திரி செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் கன்னிகாபுரம் அருகே உள்ள கிணற்றில் ஆண் – பெண் 2 பேரின் பிணங்கள் கிடப்பதாக சாணார்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்த கிடந்த 2 பேரும் சோளகுளத்துபட்டியை சேர்ந்த கணவன்– மனைவி என்பது தெரியவந்தது. போலீசார் கொடுத்த தகவலின்பேரில் முருகன், லலிதாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments: