திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் 45 நாட்கள் உல்லாசம் தப்பி ஓடிய காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் 45 நாட்கள் உல்லாசம் அனுபவித்து விட்டு தப்பி ஓடிய காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நட்சத்திர ஓட்டல் ஊழியர்
உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா பிஜுர் அருகே ஒசகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பா பூஜாரி. இவரது மகன் ராஜேந்திர பூஜாரி(வயது 25). இவர் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திர பூஜாரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள தனது நண்பன் சந்திரா என்பவரின் செல்போன் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா(வயது 20, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் செல்போனுக்கு ரீ சார்ஜ் செய்ய வந்தார்.
காதல்
அப்போது ராஜேந்திரா பூஜாரிக்கும், மஞ்சுளாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திர பூஜாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு போன் செய்து, மும்பைக்கு வா, இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்றார்.
இதையடுத்து மஞ்சுளாவும் தனது வீட்டில் இருந்து 5 பவுன் தங்க நகையையும், ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு மும்பை சென்றார். அங்கு 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மஞ்சுளா வற்புறுத்தியாக தெரிகிறது.
தப்பி ஓட்டம்
இதனால் ராஜேந்திர பூஜாரி, மஞ்சுளாவிடம் மங்களூரில் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளாலம் என்று கூறி கடந்த 2–ந் தேதி மும்பையில் இருந்து மங்களூருக்கு ரெயிலில் வந்தனர். அப்போது ராஜேந்திர பூஜாரி, பொது பெட்டியில் ஆண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதனால் நீ பெண்கள் பெட்டியில் வா என்று கூறி மஞ்சுளாவை பெண்கள் பெட்டியில் ஏற்றி விட்டார்.
இதையடுத்து ரெயில் மறுநாள் காலையில் மங்களூர் வந்ததும் மஞ்சுளா, ராஜேந்திர பூஜாரியை தேடினார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் ‘சுவிட்ச் ஆப்’ செய்திருப்பதாக தகவல் வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்.
45 நாட்கள் உல்லாசம்
இதுகுறித்து பைந்தூர் போலீசில், மஞ்சுளா புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் இந்த புகாரை எடுக்கவில்லை. இதையடுத்து மஞ்சுளா உடுப்பியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி கதறி அழுதார். பின்னர் மஞ்சுளா கங்குலி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், ‘‘ஒசகோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர பூஜாரி என்பவரும் நானும் காதலித்து வந்தோம். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மும்பைக்கு அழைத்தார். நானும் நம்பி மும்பைக்கு சென்றேன். ஆனால் அங்கு அவர் என்னை திருமணம் செய்யாமல் 45 நாட்கள் உல்லாசம் அனுபவித்தார். தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
தனிப்படை அமைப்பு
இதுதொடர்பாக கங்குலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காதலன் ராஜேந்திர பூஜாரியை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவரை பிடிப்பதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று உள்ளனர்.
No comments: