மீண்டும் ஒரு மலேசிய விமான விபத்து: 295 பேரை பலி கொண்ட சோகம்!
மாஸ்கோ: கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமான சோகம் மறைவதற்குள், 280 பயணிகள் மற்றும் 15 விமான சிப்பந்திகளுடன், ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம் ஒன்று ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் 777 ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் வான்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இரு படைகளுக்கும் இடையேயான ஏவுகணை தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய ஆதரவு படைகளின் தாக்குதலிலேயே மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிறுவனம் விளக்கம்:
விமானம் உக்ரைன் நாட்டு வான்பரப்பில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமான நிலையத்துடனான கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக, மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சோகம்:
கடந்த மார்ச் 8ம் தேதி, மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. இந்நிலையில், மீண்டும் மலேசியாவிற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியிருப்பது அந்நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ர்
No comments: