Header Ads

பெங்களூரில் தொடரும் பயங்கரம்; கண்ணில் மிளகாய்பொடி தூவி ஆந்திர சிறுமி கற்பழிப்பு

பெங்களூரில் கன்னியாஸ்திரிகள் பயிற்சி மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர், ஆந்திர சிறுமியின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கற்பழித்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

மிளகாய் பொடி தூவி... 

பெங்களூர் எண்ணூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பைரவேஷ்வரா லே–அவுட்டில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கன்னியாஸ்திரிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கன்னியாஸ்திரிகள் பயிற்சி பெறுவதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 15 வயதே ஆன மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமி சேர்ந்தாள். அந்த கட்டிடத்திலேயே மேரி தங்கி இருந்தாள்.

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பயிற்சி மையத்தின் முதல் மாடிக்கு வந்த 2 மர்மநபர்கள், அங்குள்ள அழைப்பு மணியை அடித்தனர். உடனே கதவை திறந்து கொண்டு மேரி வெளியே வந்தாள். அப்போது அந்த மர்மநபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை மேரியின் கண்ணில் தூவினார்கள். இதனால் அவள் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்தாள்.

கற்பழிப்பு 

உடனே 2 மர்மநபர்களும், முதல் மாடியில் இருந்து மேரியை தரை தளத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு வைத்து மேரியை 2 மர்மநபர்களும் மாறி, மாறி கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மேரி அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள். உடனே 2 மர்மநபர்களும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இதற்கிடையில், பயிற்சி மையத்தில் உள்ள மற்றொரு கன்னியாஸ்திரி மாடியில் இருந்து கீழே வந்த போது, மேரி மயங்கி நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மேரியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாஸ்திரி அனுமதித்தார். அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் மேரி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவளது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

வலைவீச்சு 

இதுபற்றி கேள்விப்பட்டதும் கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பயிற்சி மையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், அதனை சாதகமாக பயன்படுத்தி மர்மநபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்கள் 2 பேரையும் தேடிவருகிறார்கள். பெங்களூரில் தொடர்ந்து சிறுமிகளும், இளம்பெண்களும் கற்பழிக்கப்படும் சம்பவங்களால் பெண்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.