சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்
பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’ என்று திட்டமிடும் ஒருவனின் 'சதுரங்க வேட்டை’ வியூகங்கள்!
சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாகும் ஒன்ஸ்மோர் ஒன்லைன்தான். ஆனால், அதில் தமிழகத்தின் 'வொயிட் காலர் ஃப்ராடு’களைப் புட்டுப் புட்டு வைத்திருக்கும் டீட்டெய்லிங்... அசத்தல்!
மண்ணுள்ளிப் பாம்பு, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங், ஈமு கோழி, இரிடியம் கோபுரம்... என்று செய்திகளில் கடந்துபோன சம்பவங்கள்தான். அந்த மோசடிகளையே கதைக் களமாக்கி, செஸ் காய் நகர்த்தல் ட்ரீட்மென்ட்டில் திரைக்கதை அமைத்து, இறுதியில் அன்பின் பெருவெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹெச்.வினோத். ஒரு மனிதனின் பணத் தேவை எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், மற்றவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது, பேராசைப் பேர்வழிகளை மோசடி மன்னர்கள் எப்படி சைக்காலஜி தூண்டில் வீசி கவிழ்க்கிறார்கள், ஏமாற்றி அபகரித்த பணம் எப்படி நிம்மதியை ஆக்கிரமிக்கிறது என்று 'கேண்டிட் சினிமா’வாக சொன்ன விதம்... பளீர் பொளேர்!
ஹீரோ நட்ராஜுக்கு பணமே பிரதானம். மண்ணுள்ளிப் பாம்பை மருத்துவக் குணம்கொண்டது என்று சொல்லி விற்பது, கேன்சரைக் குணப்படுத்தும் 'அமெரிக்க ஏரி’ நீரை விற்பது, ஈமு கோழி மூலம் கோடிகள் அள்ளலாம் என்று வலை விரிப்பது எனத் தில்லுமுல்லு தகிடுதத்தங்கள் செய்கிறார். எதிர்பாராத ஒரு திருப்பத்தில், தன்னால் ஏமாற்றப்பட்டவர்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்கிறார் நட்ராஜ். தன் கர்ப்பிணி மனைவி பிணையில் இருக்க, அதுவரையிலான ஃப்ராடுத்தனங்களை மிஞ்சும் மெகா மோசடியைத் திட்டமிடுகிறார். அதில் திடீர் சிக்கல். வில்லன்களிடம் இருந்து நட்ராஜ் மீண்டாரா... மனைவியின் நிலை என்ன... திக்திக் செக்மேட்!
மது, சூது, கள்ளம், கபடம்... என சதா சர்வகாலமும் நெகட்டிவ் வைப்ரேஷன்களுக்கு இடையே, பாசிட்டிவ் அணுகுமுறையோடு நீந்தும் காந்தி பாபு கேரக்டருக்கு, நட்டி செம ஃபிட். கரன்சிகளைப் பார்த்ததும் படபடக்கும் கண்கள், வெளுக்கும் போலீஸிடம் கள்ள மௌனம், பாசம் காட்டும் போலீஸிடம் துள்ளல் வன்மம், காதலின் பிரியம், பிரிவின் துயரம்... என வளமான வார்ப்பு. அதிலும் பதமாக ஆரம்பித்து படபடவென அதிர்வு கூட்டி பாயும் புலியின் சீற்றம் சேர்த்து எதிராளியைச் சிலிர்க்கச்செய்யும் அந்த ஆன்மிக லெக்சர்... செமத்தியான சிக்ஸர். கணக்கில் இதுதான் உங்கள் முதல் சினிமா நட்டி!
படத்தின் பெரும் பலமும் பெரும் பங்குக் கைதட்டலும் குவிப்பவை... வசனங்களே! 'உலகத்துல எல்லாமே இருந்தும், உங்களுக்குனு எதுவுமே இல்லைனு இருந்திருக்கீங்களா?’, 'நாளைக்குச் சம்பாதிக்க முடியாதுனு நினைக்கிறவன்தான் சேர்த்துவைப்பான். நான் ஏன் சேர்த்துவைக்கணும்?’, 'குற்றவுணர்ச்சி இல்லாம செய்யுற எதுவுமே தப்பில்லை’, 'நான் யாரையும் ஏமாத்தலை, ஏமாறத் தயாரா இருந்தவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன்’, 'உன்னை ஒருத்தன் ஏமாத்தினா, அவனை எதிரியா நினைக்காதே... ஏன்னா, ஒரு வகையில அவன் உனக்கு குரு’, 'அஞ்சு வருஷத்துல தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்திடுவேன்னு சொல்லி ஓட்டு வாங்குறாங்க. ஆனா, தமிழ்நாடு தமிழ்நாடாதான் அப்படியே இருக்கு. இது ஏமாத்து இல்லையா?’, 'ஒவ்வொரு பொய்லயும் கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும்’, 'நாமல்லாம் முதலாளி ஆக விரும்புற கம்யூனிஸ்ட்’, 'உனக்கு மட்டும் புரிஞ்சிட்டா, நான் வேற ஐடியா யோசிக்கணும்?’... படீர் படீர் என வெடிக்கிறது ஒவ்வொரு துண்டு வசனமும். ஒவ்வொன்றிலும் அவ்வளவு அரசியல்! இடையிடையே, 'பாம்புக்கு 200 மொழி தெரியும்’, 'இளைய தளபதி விஜய்னு பேர் வைப்போமா?’, 'மதுரைக்காரன் என்னைக்குடா கட்டிங்கோட நிறுத்தியிருக்கான்?’ என்று எளிய இனிய நகைச்சுவையும் உண்டு.
கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை... என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
'மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் 'சுத்தத் தமிழ்’ வில்லன், 'சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, 'பாதி விலையில் தங்கம்’ என்றதும் 'ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் 'மாட்டு மந்தை’ மக்கள் என... படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை அசல்... அத்தனை அசத்தல்!
அறிமுகத் தோரணைகளுக்குப் பிறகு நட்ராஜிடம் ஒவ்வொரு கேரக்டரும் எப்படியும் ஏமாந்துவிடுவார்கள் என்று யூகிக்க முடிகிறது. ஆனாலும், அது எப்படி என்பதில் கடைசித் திருப்பம் வரை சுவாரஸ்யம் சேர்த்து 'லப்டப்’ எகிறவைத்திருக்கிறது ஸ்மார்ட் ஸ்கிரீன்ப்ளே! பிரமாண்ட செட் இல்லை, அசத்தல் லொகேஷன்கள் இல்லை, பழகிய முகங்கள் இல்லை... ஆனாலும் விதவித ஆங்கிள்களில், வித்தியாச வியூக்களில் கண்களை நிறைக்கிறது K.G.வெங்கடேஷின் ஒளிப்பதிவு.
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்... எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்.
ஷான் ரால்டனின் பின்னணி இசை... சேஸிங் ரேஸிங். படத்தின் பின்பாதியைப் பெருமளவு நிரப்பும் நட்டி - இஷாரா காதல் காட்சிகள், ஈரமும் ஈர்ப்புமாகப் பதிவாக்கி இருக்கலாம்.
ஏமாறியவனைப் போலவே, ஏமாற்றுபவனும் நிம்மதியாக இருக்க மாட்டான் என்று புரிய வைத்த, 'அன்பே சிறந்த ஆயுதம்’ என வலியுறுத்திய, 'மோசடிகளில் இருந்து உஷாரா இருங்கப்பா’ என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்திய... பல தளங்களில் இயங்கியிருக்கும் இந்த சினிமா, தமிழ்ச் சூழலுக்கு மிக முக்கியமான பதிவு.
சினிமாவின் பேசுபொருளை அடுத்த தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும் செம வேட்டை!
No comments: