மிகப் பொறுமையானவர் ஷங்கர்....கமல்ஹாசன் பாராட்டு..
இந்தியத் திரையுலகை, தமிழ்த் திரையுலம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். முதல் படமான 'ஜென்டில்மேன்' தொடங்கி தற்போது இயக்கி வரும் 'ஐ' படம் மூலம் பிரம்மாண்டமான இயக்குனராக மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும் அறியப்பட்டு வருகிறார். இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே வெற்றி என்ற கோட்டை தாண்டியிருக்கின்றன. சில படங்கள் இமாலய வெற்றியும் பெற்றிருக்கின்றன. 'இந்தியன்' படத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கிய பின் இயக்குனர் ஷங்கரின் நட்சத்திர அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. கிராபிக்ஸ் காட்சிகளை தமிழ் சினிமாவில் சரியாகப் பயன்படுத்துபவர் என்ற பெருமை ஷங்கருக்கு உண்டு. அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரைப் பற்றி தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் மனம் திறந்து பாராட்டிப் பேசினார்.
“நான் இவர்கிட்ட கத்துக்கிட்டது பொறுமை. பல சிக்கல்கள் சினிமால உண்டு. அதுல சில சிக்கல்களை அவாய்ட் பண்ணிடுவாங்க. இந்த படத்துக்கு இந்த சிக்கல் போதும்னு முடிவு பண்ணிடுவாங்க. கமல்ஹாசன்னு ஒரு சிக்கல் போதும். இதுக்கு மேல இழுத்து விட்டுக்கக் கூடாது அப்படின்னு நினைப்பாங்க. ஆனால், இவரு கமல்ஹாசனையே இழுத்து விட்டுக்கிட்டு, அவருக்கு ஆறு மணி நேரம் மேக்கப் போடறதையும் ஒத்துக்கிட்டு, அதை வெளிநாட்டுல போய் செய்யலாம்னு ஒத்துக்கிட்டு, எல்லாத்தையும் இழுத்து விட்டுக்கிட்டு பொறுமையா உட்கார்ந்திருப்பாரு.
அதாவது, அவரு நாடி பிடிச்சி பார்த்ததில்லை நானு, ஆனால், முகத்துல அவருக்கு பிபி இருந்தாலும் வெளிய தெரியாது. பல நேரங்கள்ல அதை நான் பார்த்திருக்கேன். அதைப் பார்த்து நாமும் இப்படி இருக்கலாம்னு முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்,” என கமல்ஹாசன் பேசினார். ஒரு மனிதனின் வெற்றிக்கு பொறுமையும் மிக அவசியம் என்பதை இயக்குனர் ஷங்கர் உணர்த்துகிறார்.
No comments: