Header Ads

ரஜினிக்குப் பதிலாக நடித்த விஜயன்...ஒரு சுவாரசியத் தகவல்...!

இன்றைய ரசிகர்களுக்கு விஜயன் யார் என்று அவ்வளவாகத் தெரியாது. விஜயகாந்த் நடித்த 'ரமணா' படத்தில் இடிந்து விழுந்த பிளாட்டுகளைக் கட்டிய தொழிலதிபராக நடித்தாரே அவர்தான் விஜயன். 70களின் இறுதியிலும், 80களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தவர். மகேந்திரன் இயக்கிய 'உதிரிப் பூக்கள்' படம் அவருடைய சிறந்த நடிப்புக்கு உதாரணம். அவரைப் பற்றிய ஒரு சுவாரசியத் தகவலை 'திலகர்' பட விழாவில் சொன்னார் இயக்குனர் பாக்யராஜ்.

“விஜயன், நான் தங்கியிருந்த ரூம்லதான் தங்கியிருந்தாரு. கேரளாதான் அவருடைய ஊர். நான்தான் அவரை எங்க டைரக்டர் பாரதிராஜா கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்த்து விட்டேன். ஆனாலும், அவருக்கு நடிக்கிறதுக்கு ரொம்ப ஆசை. நான் ஸ்கிரிப்ட்லாம் எழுதிட்டிருக்கும் போது, ராஜன், அப்படியே எனக்காகவும் ஒரு கேரக்டர் எழுதுங்களேன்னு சொல்வாரு. அப்படித்தான் 'கிழக்கே போகும் ரயில்' படத்துல பட்டாளத்தான் கேரக்டர்ல அவரை அப்படியே சேர்த்துக்கிட்டேன். ஷுட்டிங் நடந்துட்டிருக்கும் போது எங்க டைரக்டர் என்னையா அந்த பட்டாளத்தான் கேரக்டர் அடிக்கடி படத்துல வருதேன்னு சொன்னாரு. கிளைமாக்ஸ்ல சுதாகர், ராதிகாவை ஊரே துரத்திக்கிட்டு வரும் போது, இவர் குறுக்க வந்து நின்னு டயலாக் பேசுவாரு. எங்க டைரக்டர் ...என்னய்யா இவனை ஹீரோ மாதிரி ஆக்கறன்னு கேட்டாரு. இல்ல, சார் இந்த கேரக்டருக்கு நல்ல பேரு கிடைக்கும் பாருங்கன்னு சொன்னன். படம் ரிலீசான பிறகு அந்த சீனுக்கு ஒரே கிளாப்ஸ். படத்தோட விழா நடக்கும் போது 'பட்டாளத்தான்' விஜயன்னு சொன்னால் கைதட்டறாங்க. எங்க டைரக்டர்..யோவ், அவன் ஹீராவாகிட்டான்யான்னு சொன்னாரு.

அப்புறம் 'நிறம் மாறாத பூக்கள்' படத்துல ஒரு கேரக்டர்ல ரஜினிகாந்தை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணோம். ஆனால், எங்க டைரக்டர் பாரதிராஜா, அந்த விஜயனையே நடிக்க வைச்சிடலாம்யா...அவனுக்கு என்ன கைதட்டல் பார்த்த இல்லைன்னு சொன்னார். இல்லை சார், ரஜினிகாந்த் நடிச்சால் நல்லா இருக்கும்னு சொன்னோம். ஆனாலும், அவர் விஜயனே நடிக்கட்டும்யான்னு சொல்லிட்டாரு. அப்புறம், நான் நடிகனான பிறகு அவருக்காக மூணு மணிநேரம் காத்துக்கிட்டிருந்தேன். அவர் வந்த உடனே, “என்ன விஜயன், நடிக்க சான்ஸ் கேட்கும் போது எப்படி இருந்தேன். இப்ப இவ்வளவு லேட்டா வர்றியேன்னு,” கேட்டேன். சாரி..சாரி...ரொம்ப சாரின்னு சொன்னாரு. ஒரு படத்துல ஒரு நல்ல கேரக்டர் கிடைச்சிடுச்சின்னா ஒரு நடிகனுக்கு நிலைமையே மாறிடும்கறதுக்காகத்தான் இதை சொல்றேன்,” என கலகலப்பாக ஒரு சுவாரசியமான விஷயத்தைப் பகிரிந்து கொண்டார்.

No comments:

Powered by Blogger.