Header Ads

239 பயணிகளுடன் மாயமான விமானம் எங்கேதான் சென்றது? தடயம் இல்லாததால் மர்மம் நீடிப்பு

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் என்ன ஆனது என்று 3 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் தெரியவில்லை. விபத்தில் சிக்கி இருந்தால் அதன் பாகங்களை கூட கண்டுபிடிக்க முடியாமல் பல நாட்டு மீட்பு குழுவினரும் அதிர்ச்சியில் உள்ளது. மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த சனிக்கிழமை அதிகாலை 239 பயணிகளுடன் சென்றது. வியட்நாம் வான் வெளியில் சீனாவின் தென் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. அதன்பின் 3 நாட்கள் ஆகியும், அமெரிக்கா, மலேசியா, சீனா, வியட்நாம் உள்பட 10 நாடுகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும் அதன் சிறு துண்டை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், தாய்லாந்தில் காணாமல் போன பாஸ்போர்ட்கள் மூலம் மலேசிய விமானத்தில் 2 பேர் சென்றுள்ளனர். அவர்களின் ஒருவரின் அடையாளம் தெரிந்து விட்டது. அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை தற்போது தெரிவிக்க இயலாதுÕ என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் மலேசிய நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர். இதற்கிடையில் விமானத்தை தேடும் பணியில் 92 கிமீ சுற்றளவில் இருந்து சுமார் 200 கிமீ சுற்றளவுக்கு பரப்பளவை அதிகப்படுத்தி தேட முடிவு செய்திருப்பதாக மலேசிய விமான போக்குவரத்து துறை தலைவர் அசாரூதின் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். விமானத்தை தேடுவதற்காக 40க்கும் அதிகமான கப்பல்கள், 30க்கும் அதிகமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டும் கூட ஒரு சிறிய தடயத்தையும் கண்டறிய முடியவில்லை. இப்போது பிலிப்பைன்ஸ்சின் சுமத்ரா தீவு பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சதி செயலா என்று ஆராய சிறப்பு புலனாய்வு படையினரை மலேசியாவுக்கு சீனா அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் விமானத்தை தேடுவதற்கு உதவியாக தனது 10 செயற்கை கோள்களின் தகவல்களை பெறவும் சீன அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். திருட்டு பாஸ்போர்ட் துப்பு துலங்கியது மாயமான மலேசியன் விமானத்தில் திருட்டு பாஸ்போர்ட் மூலம் சென்ற நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. மலேசிய விமானத்தில் பயணம் செய்ததாக பதிவாகியிருந்த ஆஸ்திரிய பயணி கிறிஸ்டியன் கோஷல், இத்தாலிய பயணி லூகி மரால்டி ஆகியோரின் பாஸ்பார்ட் விவரங்களை சோதித்த போது இருவரும் அவரவர் நாடுகளில் உயிருடன் இருப்பது தெரிந்தது. இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்துக்கு சுற்றுலா வந்த போது பாஸ்போர்ட் திருடு போனதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாஸ்போர்ட்டின் பேரில் பயணம் செய்த இருவருக்கும் டிராவல் ஏஜென்சி ஒன்று டிக்கெட் பதிவு செய்து கொடுத்ததை மலேசிய போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ரட்சிதா போ தியாங் கூறுகையில், திருட்டு பாஸ்போர்ட்டில் சென்றவர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்த நபர் ஈரான் நாட்டை சேர்ந்த அலி என்று தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுÕ என்றார். மலேசிய விமானம் மாயமானது போலவே இதற்கு முன்பும் பல விமானங்கள் மாயமாகி உள்ளன. அவற்றை பற்றிய விவரம் வருமாறு: * கடந்த 1937ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், துணை பைலட் நூன்னுடன் விமானத்தில் சென்றார். அட்லான்டிக் கடல் பகுதியில் ஹாவ்லாந்து தீவு பகுதியில் பறந்த விமானம் மாயமானது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. * கடந்த 1945ம் ஆண்டு 14 வீரர்களுடன் சென்ற 5 போர் விமானங்கள், மர்ம பிரதேசம் என்று புவியியல் வல்லுனர்களால் அழைக்கப்படும் பெர்முடா முக்கோண பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது. * 1947ம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்டார் டஸ்ட் ரக விமானம் 11 பேரோடு ஆண்டிஸ் மலை பகுதியில் பனிப்புயலில் சிக்கி மாயமானது. 50 ஆண்டுகள் கழித்துதான் அது பனிப்புயலில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. * 1962ம் ஆண்டு 107 அமெரிக்க வீரர்களுடன் வியட்நாம் சென்ற விமானத்தின் கதியும் அதே கதிதான். அதை பற்றி ஒரு தகவல் கூட இன்னும் கிடைக்கவில்லை. * கடந்த 2009ம் ஆண்டு 228 பேருடன் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் விமானம் மாயமானது. சுமார் 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அது விபத்தில் வெடித்து சிதறியது உறுதியானது.

No comments:

Powered by Blogger.