Header Ads

கமல்ஹாசன் பதில்கள் - விகடன் மேடை

பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?''
 ''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.
பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''
புதூர் பாலா, நாமக்கல்.
 '' 'எந்திரன்’ படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா..?'' (ஹானஸ்ட்டாகப் பதில் கூறுபவராச்சே கமல்.)
''நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்!''
ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 ''பரமக்குடியில் பிறந்தீர்கள் அவ்வளவுதான். ஆனால் வளர்ந்தது, வாழ்வது சென்னையில். ஆனால், நீங்கள் ஒருபோதும் சென்னையைப்பற்றிக் குறிப்பிடுவது இல்லை. 'நான் இன்னும் பரமக்குடிக்காரன்தான்’ என்று அழுத்திச் சொல்கிறீர்கள். ஒரு சென்னைக்காரனாக மிகுந்த கோபத்தோடு இந்தக் கேள்வி?''
 ''நான் வாழ்ந்து அனுபவித்த எல்லா மண்ணிலும் என்னை ஊன்ற விரும்பாது, நாடோடிக்கொண்டு இருக்கும் கலைஞன் நான். நான் பரமக்குடிக்காரன் என்பதோடு, சென்னை வாழ் தெலுங்கு மலையாளி எனவும் கொள்ளலாம். To put it succinctly... INDIAN..''
மலைஅரசன், அருகந்தம்பூண்டி.
 ''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?''
 ''மனசாட்சி!''
பிரசன்னா, சேகரை.
 ''உங்களின் முதல் முத்த அனுபவம் எப்போது?''
 ''நான் என் குடும்பத்தில் கடைக்குட்டி. அதனால், நினைவு தெரிந்த நாள் முதல் முத்த மழைதான். முதலே நினைவில்லாத அளவுக்கு!''
ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 ''சமீபகாலமாக தமிழக முதல்வரை மேடைகளில் ஏகமாகப் புகழ்கிறீர்களே? கொச்சையாகச் சொன்னால், 'ரொம்ப ஜால்ரா’ அடிக்கிறீர்களே... ஏங்க?''
 ''அது சமீப கால நிகழ்வல்ல. குழந்தைப் பருவம் முதல் பழக்கம். அவர் முதலமைச்சர் ஆனதற்கு நான் மட்டும் பொறுப்பல்லவே. தவிர, சமீப கால மேடை ஒன்றில் கலைஞரின்  பெருமகனாரின் வாழ்க்கைக் குறிப்பு புத்தகமாக வெளிவந்தபோது, பெரும் பத்திரிகைகளின் ஆசிரியர், உரிமையாளர் பலரும் என்னுடன் மேடையில் இருந்து பாராட்டினார்கள். சிலர் அதிகமாகவே பாராட்டினார்கள். நான் கலைஞரின் ரசிகனாக அவர் ஆட்சியில் இல்லாதபோதும் இருந்திருக்கிறேன். அதைக் கொச்சைப்படுத்துவது உங்கள் குணாதிசயம். நான் எதை அடித்தாலும் தாளம் தப்பாது!''

இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.
 ''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?''
''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.
இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''
ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 ''என்னதான் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று நாம் கர்வத்தோடு மார் தட்டிக்கொண்டாலும், அவருக்குத் தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம், அவரின் மிகைப்பட்ட நடிப்புதானே?''
 ''இல்லை, அன்று நிலவிய அரசியல்!''
பி.விஜயலட்சுமி, வேலூர்.
 ''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''
 ''சமரசம்!''
பி.எஸ்.ஜனார்தன், மதுரை.
 ''தமிழ் நடிகர்களில் மிகவும் துணிச்சலானவர் விஜயகாந்த்தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''
 ''அதற்கென்ன? ஒப்புக்கொண்டால் போச்சு!''
சுகந்தி, சிவகங்கை.
 ''சமீபத்தில் பாதித்த புத்தகம்?''
 ''பல!
அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''
ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 ''ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கையை எழுத அவனுடைய அந்தரங்கத்தை அறிந்துகொள்ள ஏன் பத்திரிகைகள் (உலகமெங்கும்) ஆவல்கொள்கின்றன? அதைவிட, அவற்றைப் படிக்க வாசகன் ஏன் பெரிதும் ஆர்வம்கொள்கிறான் என்று நினைக்கிறீர்கள்? ஒரு நடிகனாக உங்களை மிகவும் பாதித்த... உங்களைப்பற்றிய செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?''
 ''அது திரைச் சீலையாக இருந்தாலும், வெறுஞ்சீலையாக இருந்தாலும் விலக்கிப் பார்க்கும் ஆதார குணம் உள்ளவர் அதிகம் இருப்பதும் ஒரு காரணம்.
ஒரு திருடன் பிடிபடும்போது, பிடிபடாத திருடன் பரிகசிப்பதுபோன்ற குணாதிசயமும் காரணம்.
நீங்கள் கேட்ட கேள்வியும் அந்தரங்கம் ஆராயும் ஒரு கேள்விதான். நானா நேரடி பதில் சொல்வேன்? இஸ்கு... இஸ்கு!''
முகமது அலி, மதுரை.
''திருமணத்துக்குப் பிறகுதான் நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய பெண்ணைச் சந்திக்கிறோம் என்பது சரியா?''

 ''இந்த வம்புனாலதான், நான் இனி மணம் முடிப்பதாக இல்லை - போதுமா?''
எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.
  ''வறுமையின் நிறம் என்ன?''
 '' 'பஞ்ச’வர்ணம்!''
கி.சித்ரா, மதுரை.
 ''ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில், உங்களை மட்டும் சந்திக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்புபற்றி..?''
 ''அவள் இறந்தாலும் இறவா நட்பு!''
ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 '' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''
 ''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''

No comments:

Powered by Blogger.