மலேசிய விமான விபத்தில் 239 பேர் சாவு: மும்பையை சேர்ந்த 3 பேர் பலி
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா தலைநகர் பெய்ஜிங்குக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் (போயிங் 777–200 ரகம்) விமானம் வியட்நாம் அருகே தோஷு தீவில் கடலில் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணம் செய்த 239 பேரும் கடலில் மூழ்கி பலியாகினர். அவர்களில் 152 பேர் சீனாவை சேர்ந்தவர்கள். மேலும் 14 நாடுகளை சேர்ந்தவர்களும் இறந்துள்ளனர்.
இந்த கொடூர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா (51) என்பவரும் ஒருவர்.
இவர் ஐ.சி.எஸ்.எப். எனப்படும் சர்வதேச மீனவ தொழிலாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்தார். சீனா அருகேயுள்ள மங்கோலியாவில் நேற்று நடந்த எப்.ஏ.ஓ. ஆசிய பசிபிக் நாடுகளுக்கான கருத்தரங்கில் கலந்துகொள்ள பெய்ஜிங் புறப்பட்டு சென்றபோது விபத்தில் சிக்கினார்.
இவர் சென்னை வேளச்சேரி ஆதம்பாக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அரியானாவை சேர்ந்த இவர் தமிழரான நரேந்திரன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர் தவிர மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது பெயர் வினோம் கொலேகர் (63). இவரது மனைவி செடானா (59), மகன் ஸ்வனாத் (23).
இவர்கள் மும்பை போரிவ்லி பகுதியில் வசித்து வந்தனர். வினோத் கொலேகர் மகிந்த்ரா அன் மகிந்த்ரா நிறுவனத்தின் முன்னாள் என்ஜினீயர் ஆவார். இவரது மனைவி செடானா ஓய்வு பெற்ற நர்சு. ஸ்வானாத் கடந்த ஆண்டுதான் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்தார்.
வினோத் கொலேகர்– சேதானா தம்பதியின் மூத்த மகன் சான்வைத் புனேயில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி மையத்தில் ஆஸ்ட் ரோசிக்ஸ் பட்டப்படிப்பில் பி.எச்.டி. முடித்துள்ளார்.
அதற்கான பட்டமளிப்பு விழா சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க வினோத் கெலோகர் குடும்பத்துடன் பெய்ஜிங் புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர்களை வரவேற்று அழைத்து செல்ல பெய்ஜிங் விமான நிலையத்தில் மூத்த மகன் சான்வெத் தயாராக மகிழ்ச்சியுடன் காத்திருந்தார். ஆனால், தனது தாய், தந்தை மற்றும் தம்பி புறப்பட்டு வந்த விமானம் மாயமாகிவிட்டது என்ற இடிபோன்ற செய்தி கேட்டு அதிர்ந்து நிலைகுலைந்து விட்டார்.
இவருக்கு கடந்த நவம்பர் மாதம்தான் திருமணமானது. இவரது மனைவி கடந்த மாதம் (பிப்ரவரி) 23–ந்தேதி தான் பெய்ஜிங் சென்றார். விபத்தில் பலியான ஓய்வுபெற்ற நர்சு சேதானா தற்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து மிகவும் பயமாகவும் பதட்டமாகவும் இருப்பதாக தனது அண்டை வீட்டாரிடம் கூறியிருக்கிறார்.
இவர்கள் தவிர புனேவை சேர்ந்த கிரந்தி ஷிர்ஷத் (44), என்ற பெண்ணும் பலியாகியுள்ளார். இவர் வடகொரியாவில் இருக்கும் தனது கணவரை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கினார்.
இதற்கிடையே கடலில் நொறுங்கி விழுந்த விமானத்தையும், அதில் இறந்த பயணிகளின் பிணங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர், மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் கூட்டாக ஈடுபட்டுள்ளன.
மலேசியா, வியட்நாம் நாடுகள் கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பியுள்ளன. அதுபோன்று அமெரிக்காவும் தனது போர்கப்பலை அனுப்பியுள்ளது. சீனா 2 மீட்பு கப்பல்களையும், பிலிப்பைன்ஸ் 3 விமானப் படை விமானங்களையும், 3 கப்பற்படை ரோந்து கப்பலையும் அனுப்பியுள்ளன.
விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை வியட்நாம் அரசு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, இறந்த பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
No comments: