மெட்ரோ ரயில் டிக்கெட் குறைந்தபட்சம் எவ்வளவு
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என நம்பப்படும், மெட்ரோ ரயிலை சென்னைவாசிகள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதற்கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முடிவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், கட்டணத்தை எவ்வளவு நிர்ணயிப்பது என உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, குறைந்தபட்சமாக ரூ.8ம் அதிகபட்சமாக ரூ.23ம் கட்டணம் நிர்ணயிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுமான செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ம் அதிகபட்சம் ரூ.30ம் கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநகர பஸ் உள்ளிட்ட மற்ற போக்குவரத்து வசதிகளின் கட்டணத்துடன் ஒப்பிட்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது, மாநகர பஸ்சில் குறைந்த பட்ச டிக்கெட் விலை ரூ.3ம் அதிகபட்சம் ரூ.15ம் உள்ளது. இது சாதாரண வகை பஸ்களுக்கு மட்டுமே. இதுதவிர டீலக்ஸ், ஏசி பஸ்களில் அதிக டிக்கெட் விலை வசூலிக்கப்படுகிறது. ஆனாலும், பஸ்களை போல மெட்ரோ ரயில் டிக்கெட் விலை அடிக்கடி உயர்த்தப்படாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கடந்த 2009ல் நிர்ணயிக்கப்பட்ட மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணமே தற்போதும் வசூலிக்கப்பட்டு வருகிறதாம். இதே போலத்தான் சென்னையிலும் டிக்கெட் விலை உயர்த்தப்படாது என கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இறுதி செய்யப்பட உள்ளதாம். அதே போல, அனைத்து மெட்ரோ ரயில் நிலையத்திலும், தானியங்கி டிக்கெட் இயந்திரம் பொருத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
No comments: