மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மலேக்கா ஜலசந்தி அருகே விபத்துக்குள்ளானதா? தேடுதல் வேட்டை தீவிரம்
கோலாலம்பூர்: தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திசை மாறி, மலேக்கா ஜல சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகி கிடப்பதாக ரேடார் மூலம், மலேசிய ராணுவம் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் வியட்நாம் கப்பல்கள் முழு வீச்சுடன் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. விமானத்தில் 2 பயணிகள் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருட்டு பாஸ்போர்ட்டில் பயணம் செய்தவர்கள் ஈரானியர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் மலேக்கா ஜலசந்தி அருகே விமானம் பயணித்துள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் பணி தொடர்கிறது. இந்நிலையில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான மலாக்கா ஜலசந்தி அருகே இறுதியில் விமானம் ரேடார் தொடர்பை இழந்ததுள்ளது என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மலேக்கா ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது நேர் எதிர் திசையில், மலேக்கா ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் விமானம் விபத்திற்குள்ளானதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக மலேசியன் ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானி அதனை மீண்டும் கோலாலம்பூருக்கே திருப்பும் வழியில் விபத்திற்குள்ளாயிருக்குமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: