சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது' ராம்ஜெத்மலானி வாதம்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா உள்பட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும், தண்டனையை ரத்து செய்ய வேண்டும், சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி மொத்தம் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு விடுமுறைகால கோர்ட்டு நீதிபதி ரத்னகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவுக்காக வாதாடுவதற்கு, மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி ஆஜாராகி இருந்தார். இதற்கிடையே கர்நாடக அரசு வழக்கறிஞராக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறிய பவானி சிங், அதற்கான கர்நாடக அரசின் அறிவிப்பாணை தன்னிடம் இன்னும் வந்து சேரவில்லை என்று கூறினார். பவானி சிங் கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, "உடனடியாக ஜாமீன் அளிக்கலாம், ஏனெனில் சிறைத் தண்டனை 10 ஆண்டுகளாக இல்லை என்பதால் ஜாமீன் பெற உரிமை இருக்கிறது" என்று வாதாடினார். "அரசு தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஜாமீன் மனுவை உடனடியாக பரிசீலிக்க இயலாது" என்று கூறிய நீதிபதி ரத்னகலா வழக்கை அக்டோபர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஜாமீன் மனுவை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றால் கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளரை அணுகலாம் என்று கூறிய நீதிபதி ரத்னகலா கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டார். இதனையடுத்து ஐகோர்ட்டு பதிவாளரை ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நாடினர். 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட மனுவை அவசர மனுவாக நாளையே விசாரிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
சிறை தண்டனை காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இல்லை என்பதால், 389 (1) பிரிவின் கீழ், அரசு தரப்பு பதில் இல்லாமலேயே ஜாமீன் பெற முடியும். எனவே ஜாமீன் மனுவை நாளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை ஏற்று கர்நாடக பதிவாளர் மனுவை நாளை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா ஜாமீன் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. மேல்முறையீட்டு மனுவை விடுமுறைகால கோர்ட்டு நீதிபதி ரத்னகலா நாளை விசாரிக்கிறார். ஜெயலலிதா ஜாமீன் மனுவை சிறப்பு அமர்வு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விசாரிக்கும். இதற்கிடையே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி’குன்ஹா இன்று கர்நாடக ஐகோர்ட்டு தலைமைப் பதிவாளர் பி.ஏ.பட்டேலை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments: