ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்!
சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய ரூ13 கோடி சொத்து குவிப்புக்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை. ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) மற்றும் 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழும், 120ன் கீழும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 3 பிரிவுகளிலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளின் கீழ் மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சாதாரண சிறையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தரவேண்டும். மொத்தம் 130 கோடி ரூபாய் அபராதத்துக்காக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தையும் நீதிமன்றம் முடக்கியுள்ளது அதாவது ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் தொடங்கி கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் ரூபாய் 130 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொகையை செலுத்தும் வரை இந்த 211 சொத்துகளையும் பறிமுதல் செய்து முடக்கி வைக்க இருக்கிறது நீதிமன்றம். அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள தொகை ஆகியவற்றிலிருந்தும் அபராத தொகை வசூலிக்கப்படும் அதுவும் போதவில்லையெனில் முடக்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்கப்பட்டு அபராத தொகை ஈடுசெய்யப்படும். சசிகலா, சுதாகரன், இளவரசிஆகிய மூவரும், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக, '120 பி' பிரிவின் கீழ், தலா ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பு. இந்த 6 மாத தண்டனையை ஏக காலத்தில் அதாவது 4 ஆண்டுகால காலத்துடன் இணைந்து அனுபவிக்க வேண்டும்.
No comments: