செல்போனில் ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: பெண் போலீசை உல்லாசத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார்
உல்லாசத்துக்கு அழைத்தும், செல்போனில் ஆபாச படம் பிடித்து மிரட்டுவதாகவும் புதுச்சேரி பெண் போலீஸ், தமிழக போலீஸ்காரர் மீது புகார் கொடுத்தார்.
பெண் போலீஸ்
புதுச்சேரி திருநள்ளாரை சேர்ந்தவர் பார்வதி (வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுச்சேரி மாநில போலீசில் போலீசாக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் எழும்பூர் உதவி போலீஸ் கமிஷனர் கலிதீர்த்தானை சந்தித்து திடுக்கிடும் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் பயிற்சிக்காக, சென்னை ஆவடிக்கு வந்திருந்தேன். பயிற்சி முகாமில் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற போலீஸ்காரரை சந்தித்தேன். தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ்காரரான அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியனில் பணியாற்றுகிறார்.
பயிற்சியின்போது அவர் என்னிடம் அன்பாக பழகியதால் இருவரும் நீண்ட நேரம் தனிமையில் உட்கார்ந்து பேசுவோம். பயிற்சி முடிந்தவுடன் நாங்கள் ஊருக்கு புறப்பட்டோம்.
ஆபாச படம்
திடீரென்று குமார், என்னை எழும்பூருக்கு வருமாறு அழைத்தார். அங்கு அவர் விடுதி அறை ஒன்றில் தங்கி இருப்பதாக சொன்னார். நான் அவரை சந்திக்க மறுத்தேன். உடனே அவர், எனக்கு தெரியாமல் என்னை செல்போனில் ஆபாச படம் எடுத்து வைத்துள்ளதாகவும், சந்திக்க மறுத்தால், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும் மிரட்டினார்.
இதனால் நான், அவர் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் அவரை சந்தித்தேன். அறையில் தனியாக இருந்த அவர், என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு பார்வதி தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
எச்சரிக்கை
உதவி கமிஷனர் கலிதீர்த்தான் விசாரணை நடத்தி, போலீஸ்காரர் குமாரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டன. தனது செயலுக்கு, குமார் வருத்தம் தெரிவித்தார்.
இதனால் அவர் மீது கொடுத்த புகாரை, பார்வதி வாபஸ் பெற்றார். இந்த சம்பவம், சென்னை போலீசில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments: