தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி: நேற்றிரவு சாப்பிடவில்லை
ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கே அறிவிக்கப்பட்டு விட்டது.
அப்போதே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது.
பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் என்ற தீர்ப்பை நீதிபதி குன்கா வாசித்தார். இதை கேட்டதும் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அடுத்தடுத்து நீதிபதி தீர்ப்பு விவரங்களை வாசித்தபோது ஜெயலலிதா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
தீர்ப்பு முழு விபரமும் வாசித்து முடிக்கப்பட்டதும் ஜெயலலிதாவை கர்நாடகா போலீசார் சிறைக்கு அழைத்து செல்லும் ஏற்பாடுகளை செய்தனர். அப்போது ஜெயலலிதாவின் இசட் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் சற்று மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதா தனக்கு தலைசுற்றலாகவும், சற்று மயக்கமாகவும் இருப்பதாக கூறினார். மேலும் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் ஜெயலலிதாவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்ப நீதிபதி குன்கா மறுத்து விட்டார். ஜெயில் டாக்டர்கள்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பேரில் ஜெயில் டாக்டர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.
என்றாலும் ஜெயலலிதா, பெங்களூரில் உள்ள ஜெயதேவ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படலாம் என்று இரவு 9 மணி வரை பரபரப்பு நிலவியது. இதற்கிடையே ஜெயலலிதா பரப்பன அக்ரஹார வளாகத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்று உறுதியான தகவல் வந்த பிறகே பரபரப்பு ஓய்ந்தது.
பரப்பன அக்ரஹராவில் உள்ள மத்திய சிறையில் 5 வி.ஐ.பி. அறைகளும், 2 வி.வி.ஐ.பி. அறைகளும் உள்ளன. அதில் ‘‘செல் நம்பர் 23’’ என்ற வி.வி.ஐ.பி. அறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவருக்கு கைதிகளுக்கு வழங்கப்படுவது போன்ற வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டது.
மேலும் அவருக்கு ‘கைதி எண். 7402’ என்ற எண் கொடுக்கப்பட்டது. அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஒரு படுக்கை, ஒரு மின்விசிறி மற்றும் அந்த அறையுடன் இணைந்த குளியல் அறை உள்ளது. நேற்றிரவு அந்த அறையில் ஜெயலலிதா தூங்கினார்.
ஜெயிலில் ஜெயலலிதாவுக்கு இரவு உணவாக 200 கிராம் அரிசி சாதம், 2 சப்பாத்தி, மற்றும் ராகி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த உணவை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார்.
சில பழ வகைகள் மட்டும் தரும்படி அவர் கேட்டார். அதன்படி அவருக்கு பழங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை ஜெயலலிதா இரவு உணவாக சாப்பிட்டார்.
ஜெயலலிதாவுக்கு நேற்றிரவு சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட போர்வை மற்றும் தலையணைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் தனிமை அறையில் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவர் யாரிடமும் பேச வில்லை.
பெங்களூரில் உள்ள இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் வி.வி.ஐ.பி. ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: