முதல்நாள் ஆசிரியரை திருமணம் செய்த புதுப்பெண், மறுநாள் காதலனுடன் ஓட்டம்
சென்னிமலையில் முதல்நாள் ஆசிரியருடன் திருமணம் செய்துகொண்ட புதுப்பெண், மறுநாளில் கள்ளக்காதலனுடன் ஓடினார். உறவினர்கள் தேடியதால் ஈரோட்டில் இருந்து, ஓட்டப்பிடாரத்துக்கு வந்து ஜோடி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பக்கத்து வீட்டினர்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர், வெள்ளியங்கிரி. சிலிண்டர் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். அவருடைய மகள் கோகிலா (வயது 23).
இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், செல்வம் (40). இவருக்கு திருமணமாகி, சுதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வம் எக்கட்டாம் பாளையம் ஊராட்சி வார்டு கவுன்சிலராக உள்ளார்.
கோகிலாவின் தாய், தந்தை இருவரும் வேலைபார்த்து வருகிறார்கள். எனவே பகல் நேரத்தில் வீட்டில் கோகிலா தனியாக இருந்தார்.
இதேபோல் செல்வத்தின் வீட்டில் அவருடைய மனைவி சுதா வேலைக்கு சென்றுவிடுவார். அவருடைய பிள்ளைகள் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிடுவார்கள். செல்வம் குடும்பத்தினரும், வெள்ளியங்கிரி குடும்பத்தினரும் நட்பாக பழகிவந்தனர். இருவரது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்களை ஒன்றாகவே கொண்டாடும் அளவுக்கு அன்யோன்மாக இருந்தனர்.
ஆடம்பர திருமணம்
சமீபத்தில் செல்வத்தின் மகள் பூப்படைந்தாள். அந்த விழாவை வெள்ளியங்கிரி குடும்பத்தினர் முன்னிற்று நடத்தினார்கள். பதிலுக்கு கோகிலாவின் திருமணத்தை முன்னின்று நடத்துவதாக செல்வம் கூறினார். அதன்படி கோகிலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தனர். அரசு பள்ளியில் வேலைபார்த்து வரும் ஆசிரியரை பேசி முடித்தனர். கோகிலாவுக்கும், அந்த ஆசிரியருக்கும் கடந்த 4-ந் தேதி தடபுடலாகவும், ஆடம்பரமாகவும் திருமணம் நடந்தது.
திருமண வேலைகளை எல்லாம் செல்வம் முன்னின்று கவனித்து வந்தார். அவரது ஈடுபாட்டை வெள்ளியங்கிரி குடும்பத்தினர் மெச்சும் அளவுக்கு வேலைகளை செய்து கொடுத்தார். திருமணத்துக்கு மறுநாள் சென்னிமலையில் நடந்த வாரச்சந்தைக்கு கோகிலாவை அழைத்துக்கொண்டு, அவருடைய தாயார் மற்றும் சிலர் சென்றிருந்தார்கள்.
சந்தையில் வைத்து கோகிலா தனது செல்போனில் பேசினார். தன்னைத் தேடி தோழி ஒருவர் வந்திருப்பதாகவும், சந்தைக்கு வெளியே அவள் நின்று கொண்டிருப்பதாகவும், எனவே அவளை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கோகிலா சென்றார். அதன்பின்பு கோகிலா திரும்ப செல்லவில்லை. சற்று நேரம் கழித்து போனில் பேசிய போது அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது.
கள்ளத்தொடர்பு
உடனே வெள்ளியங்கிரி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் மாயமானது குறித்து தெரிவிக்க தன்னுடைய குடும்ப நண்பரான செல்வத்திடம் போனில் வெள்ளையங்கிரி தொடர்பு கொண்டார். அப்போது அவரது போனும் ‘சுவிட்ச் ஆப்’ ஆகி இருந்தது. எனவே செல்வத்தின் மனைவி சுதாவிடம் போனில் பேசி, செல்வம் வந்தவுடன் தனக்கு உடனே போன் செய்யச் சொல்லுமாறு கூறி இருக்கிறார்.
சுதாவும் தன்னுடைய கணவரை பலமுறை தொடர்பு கொண்டும் செல்வத்தின் போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகவே இருந்தது. அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எனவே சுதாவும், அவருடைய குடும்பத்தினரும் செல்வத்தை தேட தொடங்கினார்கள்.
கோகிலா, செல்வம் இருவரும் மாயமாகிவில்லை, கள்ளத்தொடர்பால் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள் என்ற ரகசியம் அதன் பின்பே தெரியவந்தது. எனவே சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீஸ் ஒருபுறமும், கோகிலாவின் உறவினர்கள் மற்றொருபுறமும் தேடத் தொடங்கினார்கள்.
காரில் வந்தனர்
சென்னிமலையில் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்க, கோகிலாவும், செல்வனும் ஒரு காரில் புறப்பட்டு வந்துவிட்டார்கள்.
நீண்ட நேரம் செல்போனை செல்வம் தனது செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்திருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய நண்பர்கள் சிலருக்கு போனில் தகவல் கூறி இருக்கிறார். அதுபற்றி அவருடைய நண்பர்கள் அவ்வப்போது போலீசிடம் கூறினர். செல்வம் மதுரையில் இருந்து செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மதுரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.
கடந்த 5-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோகிலாவின் உறவினர்கள் சுமார் 20 பேர், போலீஸ் உதவியுடன் மதுரையில் தேடினார்கள். அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் நேற்று காலையில்தான் ஊர் திரும்பினார் கள்.
தற்கொலை முடிவு
தங்களை போலீசாரும், உறவினர்களும் தேடுவது பற்றி கோகிலாவுக்கும், செல்வத் துக்கு தெரியவந்தது. ‘எப்படியும் சிக்கி விடுவோம்’ என்று பயந்தனர். எனவே கள்ளக்காதல் ஜோடியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தூத்துக்குடியில் இருந்து மதுரை பைபாஸ் ரோட்டில், காரில் சென்றனர். எப்போதும் வென்றான் பசுவந்தனை விலக்கு அருகே ஒதுக்குப்புறமாக காரை நிறுத்தினர்.
அங்கிருந்து கோகிலா தனது உறவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இன்னும் சற்று நேரத்தில் காதலன் செல்வத்துடன் தற்கொலை செய்யப் போவதாகவும், தங்களை தேட வேண்டாம் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார். பின்னர் இருவரும் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றனர்.
கோகிலாவின் தற்கொலை முடிவு குறித்து உறவினர்கள், சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எங்கிருந்து கோகிலா செல்போனில் பேசி உள்ளார்? என்று விசாரணை நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் பகுதியில் இருந்து பேசி இருப்பதை போலீசார் அறிந்தனர். உடனடியாக அவர்கள் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எப்போதும்வென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார் மட்டும் அங்கு அனாதையாக நின்றதை கண்டுபிடித்தனர். போலீசார் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
விஷம் குடித்தனர்
45 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றை பார்த்தனர். அதில் 25 அடி ஆழம் தண்ணீர் இருந்தது. அதற்கு மேல் பகுதியில் இருந்த படிக்கட்டில் அந்த காதல் ஜோடியினர் விஷம் குடித்து விட்டு அமர்ந்து இருந்தனர்.
அதே நேரத்தில் அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டு வந்தனர். கோகிலா, செல்வத்தை கிணற்றை விட்டு வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். தங்களை மீட்க முயன்றால் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டினார்களாம். போலீசாரும், மேலும் சிலரும் சேர்ந்து 2 பேரையும் கிணற்றில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மயங்கி விழுந்தனர்
சிறிது நேரத்தில், விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி 2 பேரும் மயங்கி கிணற்றின் படிக்கட்டில் விழுந்தனர். உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி கோகிலா, செல்வம் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்தார். கள்ளக்காதல் ஜோடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
No comments: