மருந்து சீட்டில் முதல்வர் முடிவு!
அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து, ஜெயலலிதாவின் முடிவை அறிய முயன்ற அமைச்சர்களுக்கு, மருந்து சீட்டும், மாத்திரைகளும் கை கொடுத்தன என்ற, சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அமைச்சர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திக்குத் தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தனர். அதனால், நீதிமன்ற வளாகத்தை விட்டு அவர்கள் நகரவே இல்லை. அன்று மாலை 6:30 மணிக்கு, ஜெயலலிதாவை, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்த பின்னும் அவர்கள் அங்கிருந்து கிளம்பவில்லை. சிறையில் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுவதற்காக காத்திருந்தனர். சிறைக்கு செல்வதற்கு முன், ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்த ஜெயலலிதா, 'எல்லா மந்திரிகளும் இங்கே இருக்க வேண்டாம்; சீனியர்ஸ் மட்டும் இருங்கள். மற்றவர்களை சென்னைக்கு உடனடியாக போகச் சொல்லுங்கள்' என்று, கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ஜெயலலிதா அப்போது பேசவில்லை. அமைச்சர்களும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று, அதை வலியுறுத்தவில்லை.ஜெயலலிதா உத்தரவை அடுத்து, பாதி அமைச்சர்கள் இரவோடு இரவாக சென்னை திரும்பி விட்டனர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் மட்டும் பெங்களூரில் தங்கியிருந்தனர்.
இதே நேரத்தில், மத்திய உள்துறை அளைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக ஆளுனரிடம், தமிழக நிலவரம் பற்றியும், வன்முறை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுனரின் எதிர்பார்ப்பு, ஆட்சி தொடர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், நேற்று அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ஜெயலலிதாவிடம் ஆலோசனை கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதனால், நேற்று காலை 8:30 மணியளவில், சிறையில், ஜெயலலிதாவை சந்தித்து, அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்த, மூத்த தமிழக அமைச்சர்கள் சென்றனர். ஆனால், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், சிறைவாசிகளை சந்திக்க, பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று, சிறை துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.அதையடுத்து, அமைச்சர்கள் இக்கட்டான நிலையில், செய்வதறியாமல் ஆழ்ந்து இருந்தனர். அந்த நேரத்தில், ஜெயலலிதாவுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சிறைக்குள் அனுப்பப்படும் என்று அவர்களுக்கு தெரியவந்தது. உடனே அந்த சாக்கை பயன்படுத்தி, மருந்து சீட்டு மூலம், அடுத்த முதல்வரின் பெயரை அமைச்சர்கள் அறிந்துகொண்டதாக கூறப்படுகிறது.
No comments: