எனக்கு நானே திருஷ்டி சுத்திப்போடப்போறேன்!- விஜயசேதுபதி பேச்சு
விஜயசேதுபதி-கிருஷ்ணா இணைந்து நடித்துள்ள படம் வன்மம் . ஜெய்கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில், விஜயசேதுபதி, கிருஷ்ணா, சுனைனா, டைரக்டர் ஜெய்கிருஷ்ணா, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் யுகபாரதி, நடன மாஸ்டர் பாபி, நடிகை ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் விஜயசேதுபதி பேசுகையில்,
இந்த வன்மம் படம் நாகர்கோயில் மண்வாசனை கதையில் உருவாகியிருக்கிறது. இதில் நான் ராதா என்றொரு ரோலில் நடிக்க, கிருஷ்ணா செல்லத்துரை என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கதைப்படி எனக்கு ஜோடி கிடையாது. ஆனால், இதுவரை நான் நடிக்காத ஒரு ரப் அண்ட் டப்பான ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அதோடு நான் கேவலமாக நடனமாடுவேன். ஆனால் இந்த படத்தின் ஒரு பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு நடனமாடியிருக்கிறேன். படத்தில் வொய்ட் அண்ட் வொய்ட் வேஷ்டி சட்டை அணிந்து நடித்த நான், பாடல் காட்சியில்தான் ஜீன்ஸ் அணிந்தேன்.
மேலும், நான் நடிக்கும் படங்களின் மீது மற்றவர்களுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுதான் எனக்கு பெரிய பயத்தை கொடுத்துள்ளது.இதனால் ஒவ்வொரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்று உழைக்கிறேன்.
இந்த வன்மம் படத்தின் டைரக்டர் 25 வருடங்களாக சினிமாவில் போராடி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நானெல்லாம் சினிமாவில் நடிக்க 7 வருடமாகத்தான் போராடினேன். அதற்குள் நொந்து போய் விட்டேன். ஆனால் இந்த டைரக்டர் 25 வருடமாக பொறுமையாக இருந்திருக்கிறார். அதுவும் இந்த காலத்தில் ட்ரண்டில் கதை பண்ணியிருக்கிறார்.
அதனால் யூனிட்டில் ஒர்க் பண்ணிய அனைவருமே, அவருக்காக இந்த படத்தை மெகா ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்ற பாசிட்டீவ் எனர்ஜியுடன் உழைத்தோம். அதனால் படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அதோடு, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் கேமராமேன் பால பரணி என்னை ரொம்ப அழகாக காட்டியிருக்கிறார். அதனால் இந்த படம் ரிலீஸ் ஆகும்போது எனக்கு நானே திருஷ்டி சுத்திப்போடப்போறேன் என்றார்.
இதையடுத்து இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி நடிகை இல்லாதது வருத்தமா? என்று அவரிடத்தில் கேள்வி கேட்டபோது,
எதற்கு வருத்தப்பட வேண்டும் . எனக்குதான் வீட்டில் ஜோடி இருக்கே என்றார்.
அதோடு, பண்ணையாரும் பத்மினியும் தோல்வி பற்றி? கேட்டபோது.,
அந்த படம் தோல்வி படமல்ல. வெற்றி படம்தான். மேலும், நான் நடித்த 7 படங்களில் எனக்கு அதிகமாக பிடித்த படமே பண்ணையாரும் பத்மினியும்தான். அதனால் அந்த படம் எனது மார்க்கெட்டை டவுன் பண்ணி விட்டதாக சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments: