Header Ads

இலங்கையின் போர் குற்றம்: ஐ.நா. மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு 22 நாடுகள் எதிர்ப்பு

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டிருந்த விசாரணை குழுவுக்கு சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கால் நூற்றாண்டுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்தது.

இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, உலகில் வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன.

சிங்கள ராணுவம் போர் குற்றங்களை அரங்கேற்றியது. போர் இல்லாத பகுதிகளிலும் அப்பாவி தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இப்படி 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை அவ்வப்போது இங்கிலாந்து நாட்டின் ‘சேனல்-4’ டெலிவிஷன் ஒளிபரப்பியது. இந்த காட்சிகள், சர்வதேச சமூகத்தை உலுக்கின.

அதைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் தொடர்பாக நம்பகமான, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

கடைசியாக கடந்த மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை அளித்த அறிக்கையும் ஏற்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்க மறுத்துவிட்டது. ‘இது இலங்கையின் இறையாண்மை மீதான தாக்குதல்’ என கூறி, சர்வதேச விசாரணையை இலங்கை அதிபர் ராஜபக்சே நிராகரித்தார்.

இந்த நிலையில் 3 வல்லுனர்களைக் கொண்ட விசாரணை குழுவை ஐ.நா. சபை கடந்த ஜுன் மாதம் 25-ம் தேதி அமைத்தது.

பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசாரி (வயது 77), நியூசிலாந்து நாட்டின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் (70), பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆஸ்மா ஜஹாங்கீர் (62) ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இலங்கையில் உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள் என இரு தரப்பிலும் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாக இவர்கள் இலங்கைக்கு சென்று விசாரணை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்ற இலங்கை அரசின் அறிவிப்புக்கு தற்போது, எகிப்து தலைமையில் அல்ஜீரியா, அங்கோலா, வங்காள தேசம், பெலாரஸ், பொலிவியா, சீனா, கியூபா, ஈக்வேடர், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகாராகுவா, பாகிஸ்தான், ரஷ்யா, தெற்கு சூடான், சூடான், உகாண்டா, வினிசுலா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 22 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.