ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமின், மேல் முறையீட்டு மனு தாக்கல்: நாளை விசாரணை
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபாராதமும் விதித்தது. இந்த தண்டனைக்கு தடை கோரி ஜெயலலிதா தரப்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தசரா பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 29-முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கர்நாடக ஐகோர்ட்டில் உள்ள விடுமுறைக் கால நீதிமன்ற ஊழியர்கள் முன் இன்று ஜெயலலிதாவை ஜாமினில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், விடுமுறைக்கால நீதிமன்ற ஊழியர்களிடம் ஒரு அவசர மனுவும் தாக்கல் ஜெயலலிதா சார்பில் செய்யப்பட்டது.
நாளை நீதிபதி ரத்னகலா முன்னர் இந்த மனு விசாரணைக்கு வருகின்றது. இதேபோல், ஜெயலலிதாவுடன் இதே வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதும் நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிகின்றது.
No comments: