ஜெ. வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை, ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!
பெங்களூர்: அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது. ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னற் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது. எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர். அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை. எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.
No comments: