தீர்ப்பு எதிரொலி: மணப்பாறையில் கடைகள் அடித்து உடைப்பு
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதையடுத்து மணப்பாறையில் மறியல் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கிய அ.தி.மு.க.வினர் போலீசாருடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தீர்ப்பையொட்டி அராஜக செயல்களிலும் அ.தி.மு.க.வினர் இறங்கி உள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் திடீரென கடை வீதிக்குள் நுழைந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்த கடைகளை மூடுமாறு கூறியதோடு பல கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.
மணப்பாறையில் பஸ் நிலையப்பகுதியில் கடைகளை அடைக்குமாறு கூறி சென்ற போது அதனை தடுத்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ரெயில்வே சாலையில் உள்ள சில கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் மணப்பாறை நகர பகுதியில் 80 சதவீத அளவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
பஸ் மறியலிலும் திருச்சி–திண்டுக்கல் சாலையில் பஸ் மறியலிலும் அ.தி.மு.க.வினர் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொது மக்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளானார்கள். இதைப்போன்று வையம்பட்டி, பகுதியிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் மணப்பாறை வையம்பட்டி, துவரங்குறிச்சி அனைத்து கிராம பகுதிகளும் பந்த் நடப்பது போல மாறியது.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் கந்தர்வகோட்டை கடை வீதியில் 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு கடைகளை அடைக்கச் சொன்னர். இதில் நகர செயலளார் ராமநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாசிவா, மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பஸ்நிலையத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
No comments: