நடிகை மைத்திரி என் மனைவி; என்னை ஏமாற்றிவிட்டார்" சினிமா டைரக்டர் புகாரால் புதிய சர்ச்சை
நடிகை மைத்திரி எனது மனைவி. அவர் என்னை ஏமாற்றிவிட்டார்.“ என்று சினிமா இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது
மந்திரி மகன் மீது நடிகை புகார்
மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும், குடகு மாவட்டம் சோமவார் பேட்டையை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது நடந்து முடிந்த சில மணிநேரத்தில் கன்னட நடிகை மைத்திரி, கார்த்திக் கவுடா தன்னை காதலித்து, ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து இருப்பதாக பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கார்த்திக் கவுடா மீது ஆர்.டி.நகர் போலீசில் மைத்திரி புகாரும் செய்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடாவுக்கு எதிராக கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
புதிய சர்ச்சை
இந்த நிலையில், கன்னட சினிமா இயக்குனர் ரிஷி என்பவர் பெங்களூர் கோர்ட்டில் தனது வக்கீல் மூலமாக ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் “நடிகை மைத்திரி என் மனைவி. எனக்கும் நடிகை மைத்திரிக்கும் கடந்த 2004–ல் திருமணம் நடந்தது. நடிகை மைத்திரி என்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்“ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக இயக்குனர் ரிஷியின் பேட்டியும், அவர் அளித்த ஆதாரமும் நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு புதிய சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
மான நஷ்ட வழக்கு
இந்த புகார் தொடர்பாக நடிகை மைத்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இயக்குனர் ரிஷி என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறிய 2004–ம் வருடம் எனக்கு 16 வயது. கார்த்திக் கவுடா எனக்கு பணம் கொடுத்து சரிகட்ட நினைத்தார். ஆனால் என் முடிவில் நான் உறுதியாக இருந்ததால் வேறு வகையில் என்னை மிரட்ட நினைக்கிறார். மேலும் ரிஷி என்பவர் மூலம் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ரிஷி மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்’’ என்றார்.
No comments: