ஜெயலலிதா சொத்து குவிப்பு மீதான தீர்ப்பு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
சென்னை: ஜெயலலிதா சொத்து குவிப்பு மீதான வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: “உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்’’ என்ற இயற்கையின் நியதியை யாராலும் மாற்ற முடியாது. இதற்கு தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களுக்காக ஆட்சி செய்யவேண்டும் மாறாக லஞ்சம், ஊழல், முறைகேடு, அராஜகம் என செய்து ஆட்சி நடத்தினால் தண்டனை நிச்சயம் என்பதை இத்தீர்ப்பு நிரூபித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்: தமிழக முதலமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டு, அதன் இறுதி கட்டத்தை அடைந்து நேற்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. தீர்ப்பை தீர்ப்பாகத் தான் பார்க்க வேண்டும். ஆகையால் தமிழகத்தில் நடைபெறுகிற வன்முறைச் சம்பவங்கள் சாதாரண பொதுமக்களை பாதிக்கும் என்பதை உணர்ந்து அதனை கைவிட வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புகிறேன். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்: பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை, லஞ்சம் ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இத்தீர்ப்பையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் மீதான தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பாதுகாக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: சொத்துக்குவிப்பு வழக்கில் தாமதமாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் நீதி தரம் குறையாமல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை சரியான பாடமாக அமையும். எனவே, சொத்து வழக்கில் பெங்களூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பா.ம.க. சார்பில் வரவேற்கிறேன். தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழக்கில் ஒரு தலைமுறையை கடந்து மிக தாமதமாக ஒரு தீர்ப்பு வந்துள்ளது. அது தாமதமாய் வந்தாலும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. வருங்கால சமுதாயத்திற்கு இந்த தீர்ப்பு எச்சரிகையாக அமையும். இந்த தீர்ப்பு நேர்மையானஅரசியலுக்கும், தேர்தலுக்கும் வழிவகை செய்யும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஊழல் அரசியலுக்கு எச்சரிக்கை மணி, நேர்மை அரசியலுக்கு நம்பிக்கை வெளிச்சம், நீதித்துறையின் நம்பகதன்மையை இமயத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற தீர்ப்பு.
No comments: