வேதாரண்யத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்: விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். மேலும் விஜயகாந்த் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் காலனியில் அ.தி.மு.க. வினர் மீனவரணி செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் 200–க்கும் மேற்பட்டோர் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவ பொம்மையை எரித்தனர்.
பின்னர் கடலில் இறங்கி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா அருகே அ.தி.மு.க.வினர் விஜயகாந்த், சுப்பிரமணியசாமி ஆகியோரது உருவபொம்மையை எரித்தனர்.
முன்னதாக அவர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் வக்கீல் நமச்சிவாயம், வேதாரண்யம் கூட்டுறவு வங்கி தலைவர் அசோக் ஆகியோர் தலைமையில் விஜயகாந்த் உருவபொம்மைக்கு காலி மது பாட்டில்களை மாலையாக அணிவித்தும், சுப்பிரமணிய சாமி உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்துது எரித்தனர்.
நாகை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார் பகுதி மீனவர்கள் இன்று 2–வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை.
No comments: