Header Ads

ஜெயலலிதா பதவி இழந்ததால் மாற்று ஏற்பாடு: தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்பு: 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்

தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார். 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர்.

ஜெயலலிதாவுக்கு தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா வகித்து வந்த முதல்-அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழக்க நேரிட்டது.

இதைத்தொடர்ந்து புதிய முதல்-அமைச்சரை தேர்வு செய்ய சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பதவி ஏற்கும் நிகழ்ச்சி

புதிய முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று பகல் 1.20 மணிக்கு நடைபெற்றது. ஜெயலலிதா பதவி இழந்ததால் மாற்று ஏற்பாடாக இந்நிகழ்ச்சி நடைபெற்றதால் வழக்கமான கோலாகலம் இல்லை. இந்த விழா மிக எளிமையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகமாகவே காணப்பட்டனர்.

முதலில் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி ஏற்க தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் அழைத்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

கண்கலங்கினார்

பதவி ஏற்கும் முன்பு தனது பையில் வைத்திருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை வெளியே எடுத்து அதை வணங்கி விட்டு அவர் கண்ணீர் மல்க தழுதழுத்த குரலில் பதவி ஏற்றார்.

பின்னர் உறுதிமொழி படிவத்தில் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டுவிட்டு கவர்னருக்கு வணக்கம் தெரிவித்தார். கண்கலங்கியபடி இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கவர்னர் ஆறுதல் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டதும் அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக அரசு தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வாசிக்க அவர்களுக்கும் கவர்னர் கே.ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

30 அமைச்சர்கள்

நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, ப.மோகன், பா.வளர்மதி, பி.பழனியப்பன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், பி.தங்கமணி, வி.செந்தில்பாலாஜி, எம்.சி.சம்பத், அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.வேலுமணி, டி.கே.எம்.சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, எஸ்.சுந்தரராஜ், பி.செந்தூர்பாண்டியன், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியன், கே.ஏ.ஜெயபால், முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், டி.பி.பூனாட்சி, எஸ்.அப்துல் ரஹீம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகிய 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

பெரும்பாலான அமைச்சர்கள் பதவி பிரமாணம் எடுக்கும்போது கண்ணீர் விட்டுக்கொண்டு வார்த்தைகள் தடுமாறி சில நேரம் மேற்கொண்டு படிக்க முடியாமல் தடுமாறினர். அவ்வப்போது நிறுத்தி நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் படித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி, அனைத்து அமைச்சர்களுமே மிக மெல்லிய குரலில் உறுதிமொழியை வாசித்தனர்.

பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் சோகத்துடன் வெளியே வந்தனர். நிகழ்ச்சி முழுவதுமே ஒரு சோகமான சூழ்நிலையில் கவலை தோய்ந்த முகத்துடன் இறுக்கமான நிலையில்தான் நடந்தது.

சபாநாயகர்

பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் மா.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்புக்கு பின்னர் அமைச்சர்கள் தலைமைச் செயலகத்திற்கு பிற்பகல் 2.57 மணியில் இருந்து வரத்தொடங்கினர். அனைவரும் உற்சாகம் இல்லாமல் மிகவும் சோர்வுடனும், சோகத்துடனும் வந்தனர்.

பழைய அறையிலேயே பொறுப்பு ஏற்றார்

கடந்த அமைச்சரவையில் இருந்தபோது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் பிற்பகல் 3.15 மணிக்கு புதிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.

அவர் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிய அறைக்குச் சென்றார். முதல்-அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா வரும் பாதைகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்துவிட்டார். அவர் வந்த காரும், முதல்-அமைச்சர் காரை நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்படவில்லை. மேலும், ஜெயலலிதா இருந்த அலுவலகத்தில் அவர் பயன்படுத்தியிருந்த பொருட்கள், மேஜை, நாற்காலிகளை அப்புறப்படுத்தி, அங்கு வேறு மேஜை, நாற்காலிகளை போட்டிருந்தனர். ஆனால் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த அறைக்குச் செல்லவில்லை.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய அறையில் வந்து அமர்ந்து பொறுப்புகளை ஏற்றார். முதல்-அமைச்சர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்பது இது 2-வது முறை ஆகும். ஏற்கனவே 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி வகித்தார்.

அதிகாரிகள் சந்திப்பு

ஓ.பன்னீர்செல்வத்தை அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, பொதுத்துறை செயலாளர் யத்தீந்திரநாத் ஸ்வேன், முதல்-அமைச்சர் செயலாளர்கள் ஷீலா பிரியா, வெங்கட்ரமணன், ராமலிங்கம், கூடுதல் செயலாளர் சுடலைக்கண்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்று சந்தித்தனர்.

பொன்னாடை போர்த்துவது, பூங்கொத்து கொடுப்பது போன்றவற்றை தவிர்த்தனர்.

பின்னர் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்பட அனைத்து அமைச்சர்களும், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்த அறைக்கு வந்து ஆலோசனை நடத்தினர். பின்னர் பிற்பகல் 4.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டுச்சென்றார்.

No comments:

Powered by Blogger.