மொபைல் சாதனங்கள் - ஒரு சிந்தனை
இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.
ஸ்மார்ட் போன் ஒன்று இணைய இணைப்புடன் இருந்தால், கூகுள் மேப் மூலம், நமக்குத் தெரியாத எந்த ஊரிலும், நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். நம் தெருவின் முனையில் இருக்கும் மாரியம்மன் கோவில் குறித்துச் சொல்லி, கூகுள் மேப் வழி காட்டும்.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன. தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 10 கோடி பேரில், 7 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் பல கோடி மக்களில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
எத்தனையோ சிறு வயது மாணவ மாணவியர், தாங்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி தங்கள் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களைத் தங்கள் நண்பர்களுடன் எளிதாகவும், விரைவாகவும் பகிர்ந்து கொள்வதாகப் பெருமை பட்டுக் கொள்வது இன்று சகஜமாகிவிட்டது. இவை மட்டுமின்றி, தங்களின் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் பல சிறு வயது மாணவர்கள் கூறி உள்ளனர்.
தொழில் ரீதியாகவும், டேப்ளட் பி.சி.க்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை மெதுவாகப் பிடித்து வருகின்றன. உலக அளவில், மொபைல் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் தொடர்ந்து விற்பனையில் உயர்ந்து வருகையில், கம்ப்யூட்டர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, குறைந்து வருகிறது.
ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், இணைய இணைப்பு மற்றும் தொலை தொடர்புக்குத் தேவையான அலைக்கற்றைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், மற்ற நாடுகளில் ஏற்பட்டு வருவதைப் போல வளர்ச்சி, இந்த நாடுகளில் ஏற்படுவதில்லை. குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மொபைல் சாதனங்களில், ஸ்ட்ரீமிங் முறையில் தரும் தொழில் நுட்பம், இன்னும் இங்கு வளர்ச்சி அடையவில்லை. தொலை தொடர்பு தருவதில், சராசரி வேகத்தில், உலக அளவில் இந்தியா 119 ஆவது இடத்தையே பெற்றுள்ளது. 4ஜி அலைக்கற்றை சேவை கிடைக்கும் என்ற தகவல் இன்னும் தரப்பட்ட உறுதிமொழியாகவே உள்ளது. இதற்கான காரணம், இந்தியாவில் 15 கோடியே 30 லட்சம் பேர் வயர்லெஸ் இணைப்பு பெற்று டேட்டா பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கோடியே 53 லட்சம் பேர் மட்டுமே, வயர்லெஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த வகைப் பயனாளர் எண்ணிக்கை அதிகமானால்தான், தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்களை அமைப்பதில் முதலீடு செய்திட துணிந்து முன்னுக்கு வருவார்கள். ஆனால், இது விரைவில் நடக்கும். 1990 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் போன் பயன்பாடு அறிமுகமானபோது, தெருவோர காய்கறி விற்பனை செய்திடும் பெண்மணியும், வீடுகளில் வேலை உதவி செய்வோரும், மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்று கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.
மாறிவரும் வாழ்க்கை முறை: மொபைல் சாதனங்கள் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளன. பரிசுப் பொருட்கள், மொபைல் போன் மூலம் இணையதளங்களில் பார்க்கப்பட்டு, நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. உணவுப் பண்டங்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆர்டர் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. வாட்ஸ் அப் மூலமே, அனைத்து உரையாடல்களும், போட்டோ பகிர்தலும், ஏன், வர்த்தகமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இது ஒரு குடும்பத்தில் உள்ளவர்களிடையே, உறவுப் பாலத்தைத் தகர்ப்பதாக, ஒரு குடும்பத் தலைவி கருத்து தெரிவிக்கிறார்.
ஒரே ஹாலில் அமர்ந்து இயங்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் கைகளில் வைத்து இயக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களால், தனித் தனித் தீவுகளாக இயங்குகின்றனர்.
வயதான மூதாட்டி, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவருடைய மகன்களில் இருவர் டேப்ளட் பி.சி.யில், கேம்ஸ் விளையாடிக் கொண்டுள்ளனர். ஒரு மகள் தன் தோழியுடன் தான் எடுத்த சேலையின் போட்டோவினை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, கருத்து கேட்டு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார். மற்ற இருவர், தங்கள் பள்ளி நண்பர்களுடன் மொபைல் போனில், மெசேஜ் மூலம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும், ஒரு வீட்டில் ஒரே ஹாலில் தான் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மெட்ரோ நகரங்களில் 19 சதவீத பள்ளி மாணவர்கள், ஒரு நாளில் மூன்று முதல் ஆறு மணி நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இப்போது இது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.
இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
No comments: