உடல் நலக்குறைவால் ஜெயலலிதா அவதி: ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று காலை 5.30 மணிக்கு எழுந்த அவர் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடித்து விட்டு நடை பயிற்சி செய்தார். பிறகு அவர் உதவியாளர் வீர பெருமாள் என்பவர் வெளியில் இருந்து வாங்கி வந்த இட்லி–வடை சாப்பிட்டார். இதையடுத்து அவர் படிக்க 2 ஆங்கில நாளிதழும், 3 தமிழ் நாளிதழும் கொடுக்கப்பட்டது.
மதியம் உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்த ஜெயலலதா நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறை விதிப்படி யாரையும் சந்தித்து பேச முடியவில்லை. இதனால் சற்று சோர்வாக காணப்பட்டார்.
அவர் அடைக்கப்பட்டுள்ள அறை 12க்கு 18 அடி சுற்றளவே கொண்டது. இது ஜெயலலிதாவுக்கு கடும் அவதியை ஏற்படுத்தியது.
நேற்று மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிறை ஊழியர்களிடம் தனக்கு சக்கரை அளவு அதிகரித்து விட்டதாக தெரிவித்தார். மேலும் கண் பார்வை மங்குவதாக கூறினார்.
இதையடுத்து அவர் ஜெயில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பிறகு டாக்டர்கள், ஜெயலலிதா உடல் நிலை நன்கு திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.
சிகிச்சை பெற்ற சிறிது நேரத்தில் ஜெயலலிதா மீண்டும் அவரது அறைக்கு அழைத்து வரப்பட்டார். இதற்கிடையே சசிகலா தனக்கு வயிறு வலிப்பதாக கூறியதால் அவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதே சமயத்தில் இளவரசியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
அவர்கள் தங்களுக்கு புதிய வகை உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு பப்பாளி, எலுமிச்சை மற்றும் பழ வகைகள், பால் கொடுக்கப்பட்டது. நேற்றிரவு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டனர்.
இரண்டாவது நாளான இன்றும் ஜெயலலிதா காலை 5.30 மணிக்கு எழுந்து விட்டார். நடைபயிற்சி முடிந்த பிறகு அவர் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டார்.
ஜெயலலிதாவை சந்தித்து பேச இன்று நிறைய பேர் மனு கொடுத்திருந்தனர். ஆனால் எல்லாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை.
முதலில் அவர் அ.தி.மு.க. வக்கீல்களை சந்தித்து பேசினர். ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து வக்கீல்களுடன் அவர் விவாதித்தார்.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்புக்காக பெண் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜெயலலிதாவிடம் பேச ஆர்வம் காட்டினார்கள். ஆனால் நேற்றும், இன்றும் அவர்களுடன் பேசும் மனநிலையில் ஜெயலலிதா இல்லை.
ஜெயலலிதாவுக்கு பெண் கைதிகள் அணியும் வெள்ளை நிற சேலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த சேலையை ஜெயலலிதா அணியவில்லை. வி.ஐ.பி. என்பதால் இதை அவரது முடிவுக்கே சிறைத் துறை அதிகாரிகள் விட்டு விட்டனர்.
ஜெயலலிதா பயன்படுத்த உடைகள் மற்றும் தேவையானப் பொருட்கள் ஒரு வேனில் சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரப்பன அக்ர ஹாரா சிறை வளாகத்துக்குள் நிறுத்தப்பட்டுள்ள அந்த வேனில் இருந்து தனக்கு தேவையானவற்றை ஜெயலலிதா எடுத்து பயன்படுத்தி வருகிறார்.
மத்திய சிறைத்துறை விதிப்படி அதிக காலம் தண்டனை பெற்று வருபவர்கள் சிறைக்குள் ஏதாவது வேலை செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜெயில் நிர்வாகம் டெய்லரிங், காய்கறி வெட்டுதல் உள்பட சில பணிகளை வரிசைப் படுத்தி உள்ளது.
ஆனால் இந்த வேலைகளை ஜெயலலிதா செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரது அரசியல் சேவை, வி.ஐ.பி.க்குரிய மதிப்பு மற்றும் வயது, உடல் நலக்குறைவு போன்ற காரணங்களால் அவர் விலக்கு பெற முடியும்.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள அறையில் நாற்காலிகள் கூதலாக வழங்கப்பட்டுள்ளது. பிரிட்ஜ், டி.வி. வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இட நெருக்கடிதான் அவஸ்தையை ஜெயலலிதாவுக்கு கொடுத்துள்ளது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 2100 பேரையே அடைத்து வைக்க வசதி உள்ளது. ஆனால் தற்போது 4200 பேர் உள்ளனர். இதுவும் இட நெருக்கடிக்கு ஒரு காரணமாகும்.
No comments: