எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மோதல்; பெட்டிகள் தூக்கி வீசப்பட்டது 12 பேர் பலி 45 பேர் படுகாயம்
உத்தரபிரதேசத்தில் சிக்னலை மதிக்காமல் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், மற்றொரு ரெயிலுடன் மோதிய கோர சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
ரெயில்கள் மோதல்
உத்தரபிரதேசத்தின் மதுவாதீயில் இருந்து லக்னோ செல்லும் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 11 மணியளவில் கோரக்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. நந்தா நகர் கிராசிங் அருகே சென்ற போது ரெயிலை நிறுத்துவதற்கான சிக்னல் போடப்பட்டிருந்தது.
இந்த சிக்னலையும் மீறி கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் டிரைவர், ரெயிலை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது லக்னோவில் இருந்து வந்து கொண்டிருந்த பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில், இணைப்பு தண்டவாளம் மூலம் அடுத்த தண்டவாளத்தில் திரும்பி கொண்டிருந்தது. ஆனால் கிரிஷாக் எக்ஸ்பிரஸ் ரெயில் மிகவும் வேகமாக வந்ததால், அது பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
தூக்கி வீசப்பட்ட பராவ்னி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள்.
3 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன
அந்த ரெயில் மோதிய வேகத்தில், பராவ்னி எக்ஸ்பிரசின் 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியே தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால், ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் ரெயில் பெட்டிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி, ‘அய்யோ’ என மரண ஓலமிட்டனர். இந்த கோர சம்பவத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 45 பேர் பலத்த காயமடைந்தனர்.
No comments: