விதர்பா மண்டலத்தில் கடன் தொல்லையால் 6 விவசாயிகள் தற்கொலை தீபாவளி நாளில் நடந்த பரிதாபம்....
தீபாவளி நாளில் விதர்பா மண்டலத்தில் கடன் தொல்லையால் 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்து உள்ளது
கருப்பு தீபாவளி
மராட்டியத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி மக்கள் வாழும் பகுதி விதர்பா. சீரற்ற பருவநிலை மாற்றங்களால் விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தால் இங்கு தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தீபாவளி பண்டிகையை நாடே உற்சாகமாக கொண்டாடிய வேளையில் விதர்பா பகுதியை சேர்ந்த 6 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது விதர்பா பகுதி மக்களுக்கு இருண்ட தீபாவளியாக அமைந்து விட்டது.
6 பேர் தற்கொலை
கீழரா கிராமத்தை சேர்ந்த ராஜேந்திர சசன்த், உமரி பகுதியை சேர்ந்த தத்தா சேடே, பார்வா பகுதியை சேர்ந்த நாகராஜ் மகதோலே, யவத்மால் மாவட்டம் கங்காப்பூரை சேர்ந்த அருண் குர்னுலே, அகோலா பகுதியை சேர்ந்த கிசான் சனாப் மற்றும் அமராவதியை சேர்ந்த மனோஜ் ஆகிய 6 விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் ஆவர்.
விதர்பா மண்டலத்தில் இந்தாண்டு(2014) மட்டும் 900 பேர் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்போது 6 பேர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் சாவு எண்ணிக்கை 906 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 2001–ம் ஆண்டு முதல் இன்று வரை விதர்பாவில் 11 ஆயிரத்து 29 பேர் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
No comments: