சிறையில் ஜெயலலிதா: எச்சரிக்கையோடு விமர்சிக்கும் திமுக
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா சிறையில் உள்ளது திமுகவுக்கு புத்துயிர் அளித்திருப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடந்த புதன்கிழமை பேசினார். ஜெயலலிதா சிறை சென்ற பிறகு, முதல் முறையாக பகிரங்க விமர்சனத்தை கருணாநிதி முன் வைத்துள்ளார்.
ஆனால், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் 2ஜி வழக்கு விசாரணை சூடு பிடித்துவரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்த விமர்சனங்களில் திமுக சற்று எச்சரிக்கையுடனேயே செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "2ஜி வழக்கில் ஒருவேளை தீர்ப்பு கனிமொழிக்கு எதிராக அமைந்துவிட்டால் 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக, ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது" என்றார்.
"தன்னை வளர்த்துக் கொண்ட இயக்கத்தையே ஒழித்து வீழ்த்துகின்ற வகையிலே ஜெயலலிதா அம்மையார் செயல்பட்டு, அவர்களாகவே வலையில் சிக்கிக் கொண்டு இன்றையதினம் திராவிட இயக்கத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தங்களை அறியாமல் துணையாக வந்து விட்டார்கள்" என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துல் கருணாநிதி பேசியிருக்கிறார்.
சரியான கொள்கை இல்லை
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை திமுகவுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சரியான, நிலையான அரசியல் கொள்கை வகுக்கப்பட முடியாத நிலையே இருக்கிறது என திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியும், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவும் 2ஜி வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நவம்மரில் துவங்கவுள்ளது. அமலாக்கப் பிரிவு தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் முன்வைத்த கருத்துகளை வைத்துப் பார்க்கும்போதுmம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய கர்நாடக உயர் நீதிமன்றம், ஊழல் மனித உரிமை மீறலாக பார்க்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டு ஒராண்டுக்குள் பதிவு செய்யப்பட்ட வேண்டும் என கூறியிருப்பதும், 2ஜி வழக்கிலும் அதேபோல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது" என்றார்.
ஆரவாரம் குறைவு
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போதிலும், 2ஜி வழக்கு நிழலாக தொடர்வதால் திமுக தொண்டர்களால் உற்சாக மிகுதியுடன் இருக்க முடியவில்லை என்பது அன்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிந்தது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தமிழில் மொழிபெயர்த்து அதனை தொண்டர்களுக்கு துண்டுப் பிரசுரங்களாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது கூட தொண்டர்கள் உற்சாகம், ஆரவாரம் சற்று குறைந்தே காணப்பட்டது.
No comments: