ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விபரம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவருக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
அதிமுகவின் 43-வது ஆண்டு விழாவன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன.
உச்ச நீதிமன்ற விசாரணை விவரம்:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜரானார். ஃபாலி எஸ்.நாரிமன் சிறப்பாக வாதாடினார். ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அவர் வாதாடினார்.
சுப்பிரமணியன் சுவாமி வாதம்:
சுப்பிரமணியன் சுவாமி மனுவில், “ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நீதிமன்றத்தில் அவர் இன்று முன்வைத்த வாதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில் முதன்முதலாக வழக்கு தொடுத்தவர் என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சுவாமியின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதி நாரிமன், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடாது என ஜெயலலிதாவே அறிக்கை வெளியிடுவார் என உறுதியளித்தார்.
நாரிமன் வாதம்:
ஊழல் வழக்கில் ஒரு நபர் குற்றம் நிரூபிக்கப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனையும் பெறப்பட்ட நிலையில் அவர் சார்பில் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அதை உச்ச நீதிமன்றம் சற்று தாராள கொள்கையுடன் அணுக வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இதற்கு முன்னர் சந்தித்த பல்வேறு வழக்குகளில், தண்டனை கைதி மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது அவரை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு முடியும் வரை உச்ச நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நபரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது. இதை கருத்தில் கொண்டே கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என பவானி சிங் தெரிவித்தார்.
பவானி சிங் வாதத்தில் தவறேதும் இல்லை. ஆனால், அவர் ஏதோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேசப்பட்டது. எனவே, ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். தேவைப்பட்டால் ஜெயலலிதா வீட்டுக் காவலில் இருக்கவும் தயாராக இருக்கிறார்” என்று நாரிமான் வாதிட்டார்.
நீதிபதிகள் கூறியதாவது:
ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, “ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.
எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.
அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணஙள் சமர்ப்பிக்கட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது” இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
No comments: