ஜெயலலிதா முதல்-அமைச்சர் பதவி வகிக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை நந்தனத்தை சேர்ந்தவர் ஆர்.பிரபாகரன் (வயது 37). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு, 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த மாதம் 27-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அன்றே தமிழக சபாநாயகர், தமிழக கவர்னர் ஆகியோருக்கு தெரியப் படுத்தும்படி தனிக்கோர்ட்டு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்ப்புக் குறித்து டி.வி. சேனல்களில் செய்திகள் ஒளிப்பரப்பப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அ.தி.மு.க.வின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
லில்லி தாமஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், ஜெயில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் தானாக தகுதி இழப்பு செய்யப்பட்டுவிடுவார் என்று கூறியிருந்தாலும், அந்த தீர்ப்பில் பிரதமர், மாநில முதல்-அமைச்சர்கள் ஆகிய பதவிகளை பற்றி குறிப்பிடவில்லை.
பிரதமர், முதல்-அமைச்சர்கள் ஆகிய பதவிகளுக்கும், எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கும் பெரும் வித்தியாசங்கள் உள்ளது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவியில் இல்லாதவர்கள் கூட 6 மாதங்கள் முறையே பிரதமர், முதல்-அமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்கலாம்.
எனவே, தனிக்கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா இழந்தாலும், அவர் 6 மாதங்கள் வரை முதல்-அமைச்சர் பதவியில் தொடரலாம்.
ஆனால், ஜெயலலிதாவை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வது மற்றும் புதிய முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தது ஆகிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் தமிழக கவர்னர் கலந்து ஆலோசனை செய்யவில்லை. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, முதல்-அமைச்சராக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவை இடைக்கால முதல்-அமைச்சராக பணி செய்ய உடனடியாக அனுமதிக்கவேண்டும். மேலும், எந்த சட்டத்தின் அடிப்படையில் முதல்- அமைச்சராக பதவியில் நீடிக் கிறார் என்று ஓ.பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்டு அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அதேநேரம், முதல்-அமைச்சராக 2011-ம் ஆண்டு மே 16-ந் தேதி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதன் அடிப்படையில் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் பதவி வகிப்பது தொடர்பாக தகுந்த உத்தரவினை இந்த கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து, ‘இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டனர்.
No comments: