ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., விளக்கம்
பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கர்நாடகா மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெய சிம்ஹா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பவில்லை; சிறையில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுகிறார். பரப்பன அக்ரஹாரா சிறையில், வி.ஐ.பி.,க்களுக்கென்று தனி 'செல்' எதுவும் கிடையாது. சாதாரண 'செல்'லிலேயே ஜெயலலிதா உள்ளார். சிறையில், 'ஏசி' வசதி கிடையாது. டாக்டர்கள் ஆலோசனைப்படி, ஜெயலலிதாவுக்கு, 'பெட்' கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயலலிதா, தான் யாரையும் சந்திக்க வேண்டும் என கூறவில்லை; அதனால், நாங்களும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அவரை பார்க்க வருபவர்கள், சிறை வாசலில் நின்று சென்று விடுகின்றனர். ஜெயலலிதாவுக்கு தினமும், மூன்று வேளை, மருத்துவ பரிசோதனையை, டாக்டர் மேற்கொள்கிறார். ஜெயலலிதாவுக்காக, சிறப்பு நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகள்படி, சிறை சீருடை அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதனால், அவர், அவரது உடையையே அணிந்து கொண்டுள்ளார். சிறையினுள் ஜெயலலிதா இருப்பது பற்றி, மீடியாக்கள் பல விதத்தில் செய்திகள் வெளியிடுகின்றன. இவை அனைத்தும் பொய்யான தகவல்களாக உள்ளது. உங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக, என்னை போன் மூலம் தொடர்பு கொண்டால் தெரிவிப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
நேற்று, காந்தி ஜெயந்தி விடுமுறை தினமாக இருந்ததால், சிறை கைதிகளை பார்ப்பதற்கு, யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால், லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பச்சைமால் உட்பட பலர் ஜெயலலிதாவை பார்க்க வந்திருந்தனர். ஆனால், யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை. வழக்கம் போல், சிறை வளாகத்தின் முன் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
No comments: