ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவு!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி
இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்துள்ளார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
ஜெயலலிதா தரப்பு வாதம்
ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைத்தது. மேலும், மேல்முறையீட்டு மனுவை விசாரித்து முடிக்க 3 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், 3 மாதத்தில் விசாரித்து முடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றம் வழக்கை கருத்தில் கொள்ளும் என்று தெரிவித்தனர்.
No comments: