கேரளா - 'கத்தி' கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர் மரணம்! -
விஜய், சமந்தா நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'கத்தி' படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கேரளாவில் விஜய் படங்களுக்கு கடந்த சில வருடங்களாக பலத்த வரவேற்பு இருந்து வருகிறது. அங்கும் அவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் படம் வெளிவந்தால் தமிழ்நாட்டைப் போலவே அங்குள்ள ரசிகர்களும் விஜய் பட வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். இது கடந்த சில படங்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. மிகப் பெரிய பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என தமிழ்நாட்டு ரசிகர்களின் ஜுரம் அவர்களுக்கும் தொற்றிக் கொண்டது.
நேற்று 'கத்தி' படம் கேரளா முழுவதும் கோலாகலமாக திரையிடப்பட்டது. வடக்கஞ்சேரி என்ற ஊரிலும் படம் வெளியாகியுள்ளது. அங்கு திரைப்படத்தைப் பார்த்த உன்னி என்கிற 24 வயது விஜய் ரசிகர் ஒருவர் படம் பார்த்த உந்துதலால் படத்திற்காக வெளியில் வைக்கப்பட்டிருந்த மிகவும் உயரமான பிளக்ஸ் பேனர் மீது பாலாபிஷேகம் செய்வதற்காக அந்த கட் அவுட்டின் சாரம் மீது ஏறியிருக்கிறார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து மரணமடைந்தார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துயரமான சம்பவம் கேரளாவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்து வெளிவரும் படங்களுக்கு பாலாபிஷேகம் செய்வது தமிழ்நாட்டில் பல காலமாக நடைபெற்று வருகிறது. இவற்றை சம்பந்தப்பட்ட நடிகர்களே தடுக்க வேண்டும் என்ற குரல் தற்போது பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது பற்றி கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
No comments: