என்னை சந்திக்க வரவேண்டாம்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் தற்போது கோர்ட்டுகளுக்கு தசரா விடுமுறை என்பதால் அவரது ஜாமீன் மனுவை விடுமுறை கால நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.
7–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வழக்கமான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.
இதனால் கடந்த 27–ந்தேதி முதல் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அதே சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலில் அவர் இதுவரை யாரையும் சந்திக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து அவரை பார்க்கச் சென்ற அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் என அனைவரும் ஜெயலலிதாவை சந்திக்காமல் திரும்புகிறார்கள்.
என்றாலும் தினமும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். சிறையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே அவர்களை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகிறார்கள்.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம், கடை அடைப்பு போன்ற அறவழி போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். சென்னையில் நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எம்.ஜி.ஆர். நினைவிடம் முன் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்காக தமிழ்நாடு முழுவதும் தீக்குளித்தும், அதிர்ச்சியிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அ.தி. மு.க.வினர் இடையே கொந்தளிப்பும், சோகமும் காணப்படுகிறது.
இதற்கிடையே ஜெயலலிதா சிறை அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தகவல் அனுப்பி உள்ளார். அதில் என்னை சந்திப்பதற்காக தொண்டர்கள் யாரும் இங்கு (பெங்களூர்) வரவேண்டாம். தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று சிறைக்கு வெளியே ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் கர்நாடக சிறை அதிகாரிகள் ஜெயலலிதாவின் இந்த செய்தியை தெரிவித்தனர்.
ஜெயலலிதா சிறையில் பத்திரிகைகள் படித்து பொழுதை கழிக்கிறார். காலையில் வாக்கிங் செல்கிறார். டாக்டர்கள் பரிந்துரை செய்யும் உணவு வகைகள் சிறை விதிக்கு உட்பட்டு வழங்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூர் சிறைக்கு உள்ளே தசரா விழா கொண்டாடப்பட்டது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. தனது அறையை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை.
ஜெயலலிதாவை அதே சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டும் சந்தித்தனர். கடந்த 27–ந்தேதி முதல் இதுவரை 4 முறை அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: