நிருபரின் அறுவைசிகிச்சைக்கு அஜித் செய்த உதவி!
10 ஆயிரம் ரூபாய் உதவி செய்துவிட்டு, 10 லட்சத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் ஹீரோக்களுக்கு மத்தியில், வெளியே தெரியாமல் பலருக்கும் உதவிகளை செய்து வருபவர் அஜித். தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை இப்படி உதவி செய்வதற்காக செலவு செய்யும் அஜித், யாருக்கு உதவினாலும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை இடுவார். சில தினங்களுக்கு முன் மூத்த சினிமா நிருபர் ஒருவர் இதயநோய் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். ஆபரேஷனுக்கு சில நாட்களுக்கு முன், இந்த விஷயம் அவரது மானேஜர் மூலம் அஜித்தின் கவனத்துக்கு வந்தது.
குறிப்பிட்ட அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தயாரித்த படத்தில் ஏற்கனவே அஜித் நடித்திருக்கிறார். அந்த வகையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசிய அஜித், மூத்த சினிமா நிருபரின் ஆபரேஷன் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, அந்த நிருபரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்று சொல்லியதோடு, தன் உதவியாளரை அனுப்பி சில லட்சங்களை அட்வான்சாக அந்த மருத்துவமனையில் கட்டிவிட்டார். இந்த விஷயத்தை அறிந்ததும் அந்த நிருபர் அஜித்துக்கு போன் செய்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கிறார். அஜித்தோ வழக்கம்போல் இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று பெருந்தன்மையாக கூறினாராம். -
No comments: