Header Ads

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன்? நீதிபதி குன்கா விளக்கம்

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பில், ஜெயலலிதா மீது கருணை காட்ட முடியாதது ஏன் என்பது குறித்து நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா ஆயிரத்து 136 பக்க தீர்ப்பு அளித்தார். அவரது தீர்ப்பின் மேலும் பல பகுதிகள் வருமாறு:-

ஜெயலலிதா தனது முதல்-அமைச்சர் பதவி காலத்தை (1991-1996) தொடங்கும்போது, அவரது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965 ஆக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் சொத்துகளும் அடங்கும்.

அவரது பதவி காலத்தில், அவரது சட்டப்பூர்வ வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ஆகும். ஆனால், பதவி காலத்தின் முடிவில், அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மதிப்பு, தற்போதைய சந்தை மதிப்பு அல்ல. இந்த வழக்கில், சொத்துகளின் மதிப்புகள், 1991-1996-ம் ஆண்டு காலகட்டத்தில், குற்றவாளிகள் என்ன விலைக்கு வாங்கினார்களோ, அதே மதிப்புக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளன.

அந்த சமயத்தில், 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு அவர்களால் வாங்க முடிந்தது. ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்க முடிந்தது. இந்த விலையில், ரூ.53 கோடிக்கு ஒட்டுமொத்த கிராமத்தையே வாங்கி விடலாம். இந்த பின்னணியில்தான், அவர்கள் வாங்கிய சொத்துகளின் வீரியத்தை பார்க்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளவை தீர்மானிக்கும்போது, அவர்கள் எந்த முறையில் சொத்து வாங்கினார்கள் என்று பார்க்க வேண்டி உள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் பெயரிலும், தாங்கள் தொடங்கிய நிறுவனங்களின் பெயர்களிலும் சொத்துகளின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, ஊழல் புரிய தூண்டுகோலாக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா குவித்த சட்டவிரோத சொத்துகளை போடுவதற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்ற முடிவுக்கு நான் வருகிறேன். 4 குற்றவாளிகளில் யாருமே இந்த நிறுவனங்களின் முதலீட்டுக்கு எந்த பங்கும் போடவில்லை. அந்நிறுவனங்களின் பெயரில் எந்த வர்த்தகமும் செய்யவில்லை.

அந்த நிறுவனங்கள் செய்த ஒரே பணி, வங்கி கணக்கு தொடங்குவதும், பிற வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவதும், ஜெயலலிதா சார்பில் சொத்துகளை வாங்க முதலீடு செய்வதுமே ஆகும்.

செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களைக் கூட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கி, அவற்றின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ஜெயலலிதா கொடுத்த பணத்தை வைத்து, அந்த நிறுவனங்களின் பெயரில் பெரிய சொத்துகளை வாங்கி உள்ளனர்.

இந்த சொத்துகளுக்கான நிதி ஆதாரம் முழுவதும் ஜெயலலிதாவால் தரப்பட்டது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை. எனவே, 4 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசுத்தரப்பு நிரூபித்துள்ளது.

ஊழல் செய்த அரசு ஊழியருக்கு ஓராண்டுக்கு குறையாமலும், 7 ஆண்டுகளுக்கு மிகாமலும் ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க ஊழல் தடுப்பு சட்டத்தின் 13(2)-வது பிரிவு வகை செய்கிறது. அதை பயன்படுத்த வேண்டி உள்ளது.

தமிழக அரசின் மிக உயர்ந்த பதவியில் ஜெயலலிதா இருந்து கொண்டு இதில் ஈடுபட்டதுதான், குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது. ‘மன்னன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழி’ என்று ஒரு பழமொழி உள்ளது.

‘உயர் பதவியில் இருப்போரின் தவறுகள் மீது கனிவோ, இரக்கமோ காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும்’ என்று கர்நாடக ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் கனிவுக்கோ, அனுதாபத்துக்கோ இடம் இல்லை.

இந்த வழக்கு, தனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும், 18 ஆண்டுகள் கடந்து விட்டது என்றும், இந்த காலகட்டத்தில் பதற்றமும், மனவேதனையும் அடைந்திருப்பதாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்து வருவதாகவும், இப்போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், உடல்நலக்குறைவு அடிப்படையிலும் கருணை காட்டுமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் இந்த காரணங்கள் எல்லாம், கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல என்பது எனது கருத்து. இந்த வழக்கு 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்ததில் சந்தேகமே இல்லை. இந்த தாமதத்துக்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், நீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால்தான், இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வழக்குக்கு தடை இருந்ததிலும் சந்தேகமே இல்லை. ஆனால், அதன்பிறகும் குற்றவாளிகள் சட்ட நடைமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கணிசமான நேரத்தை வீணடித்தனர்.

குற்றவாளிகள், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நேரத்தையும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் தவிர, பிற நாட்களில் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருந்ததால், தாங்கள் மனவேதனை அடைந்ததாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்த காரணங்கள், தண்டனையின் அளவை தீர்மானிப்பதற்கு ஏற்கத்தக்கவை அல்ல.

குற்றத்தின் தீவிரத்தன்மை, சொத்துகளின் அளவு, அவை குவிக்கப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையின் அளவை தீர்மானிக்க முடியும். அப்படி பார்க்கும்போது, இது கடுமையான தண்டனை விதிக்கத்தக்கது. எனவே, இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு), பாதிக்கு மேல் விதித்தால்தான், நீதி நிலைநாட்டப்படும்.

No comments:

Powered by Blogger.