நடு ரோட்டில் நடிக்க வாய்ப்பு கேட்ட அசின்!
அசின், என்ற ஒரு நடிகையை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக மறந்தே போயிருப்பார்கள். அவர் கடைசியாக தமிழில் நடித்த காவலன் திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டது. அதன் பின் எந்த தமிழ்ப் படத்திலும், ஏன் தெலுங்குப் படத்தில் கூட நடிக்கவில்லை. ஒரு காலத்தில் தெலுங்கில் கூட முன்னணி நடிகையாக இருந்தவர் அசின் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கடைசியாக நடித்த தெலுங்குப் படம் வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இல்லாமல் தற்போது ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தப் படமும் அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்கிறார்கள்.
உள்ளம் கேட்குமே படம்தான் அசின் தமிழில் நடித்த முதல் படம் என்றாலும் முதலில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம்தான் வெளிவந்தது. ஆனால், அவருக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுத்த படம் கஜினி.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடு வீதியில் அசின் வாய்ப்பு கேட்ட சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரியப்படுத்தினார். கஜினி படத்தில் முதலில் வேறு ஒரு ஹீரோ நடிப்பதாக இருந்த போது அசின்தான் நாயகி என முடிவு செய்து அவரை வைத்தும் போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார்கள். ஆனால், அதன் பின் அந்தப் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாம்.
ஒரு நாள் முருகதாஸ் சென்னையில் உள்ள பாண்டிபஜாரில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்ற ஒரு கார் திடீரென நின்றதாம், அதிலிருந்து யாரோ ஒரு பெண் இறங்கி அவரை நோக்கி ஓடிவந்தாராம். கிட்ட வந்த பிறகுதான் தெரிந்ததாம் அது அசின் என்று.
“என்ன சார் போட்டோ ஷுட் எடுத்தீங்க அதற்குப் பிறகு என்னை நடிக்கக் கூப்பிடவேயில்லையே,” என்று அசின் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த முருகதாஸ், “இல்ல, அந்த ஹீரோ படத்துல நடிக்கலை, படமும் டிராப் ஆகிடுச்சி.
வேற ஹீரோ டிரை பண்ணிட்டிருக்கேன்,” எனச் சொன்னாராம். அதற்கு அசின் “அந்தப் படத்தை நீங்க எப்ப திரும்ப எடுத்தாலும், நான்தான் ஹீரோயினா நடிக்கணும்,” என உரிமையுடன் கேட்டிருக்கிறார்.
அதன் பின் கஜினி படத்தில் சூர்யா நடிக்க முடிவான போது அந்த நடு வீதி சம்பவத்தை ஞாபகத்தில் வைத்து அசினை நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்தாராம் முருகதாஸ். ஆனால், அதே முருகதாஸுடன் அசின் பின்னர் சண்டை போட்டது தனிக் கதை…
No comments: