என்ன சத்தம் இந்த நேரம் (2014)
நடிகர் : ஜெயம் ராஜாநடிகை : மானுஇயக்குனர் : குரு ரமேஷ்இசை : நாகாஓளிப்பதிவு : சஞ்சய் லோகநாத்
ராஜா-மானு தம்பதிகளுக்கு அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்று நான்கு பெண் குழந்தைகள். இந்த நான்கு பெண் குழந்தைகளும் காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள். ராஜா, தனக்கு நான்கு பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் எதிர்காலத்திற்காக எந்நேரமும் வேலை வேலை என்று இருக்கிறார். இதனால் கோபம் அடையும் மானு விவாகரத்து கேட்டு வழக்கு தொடர, இருவரும் பிரிந்தே வாழ்கிறார்கள். தாயுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள், தனது அம்மாவும் அப்பாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இந்நிலையில் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்கிறார்கள். நான்கு குழந்தைகளையும் மானு சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறார். அப்பள்ளியில் டீச்சராக வேலை செய்யும் மாளவிகா நான்கு குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
சுற்றுலாவில் பள்ளி குழந்தைகள் அனைவரும் மிருகங்களை பார்த்து வருகிறார்கள். அப்பூங்காவில் நிதின் சத்யாவும், இமான் அண்ணாச்சியும் பணி புரிந்து வருகிறார்கள். இமான் அண்ணாச்சியின் அலட்சியத்தால் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கூண்டில் இருந்து வெளியே வந்து விடுகிறது.
இது கொடிய பாம்பு என்பதால் பூங்காவில் உள்ள அனைவரும் பூங்காவை விட்டு வெளியில் செல்கிறார்கள். ஆனால் நான்கு குழந்தைகள் மட்டும் உள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். அக்குழந்தைகளை மீட்பதற்காக இமான் அண்ணாச்சி, நிதின் சத்யா மற்றும் மாளவிகா ஆகியோர் பூங்காவிற்குள் தேடுகிறார்கள். இந்த விஷயம் மானுவிற்கும் ராஜாவிற்கும் தெரிந்து அவர்களும் பூங்காவிற்கு வருகிறார்கள்.
இறுதியில் பாம்புவிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கொண்டு வந்தார்களா? பிரிந்து வாழும் ராஜா-மானு தம்பதியர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஜெயம் ராஜா முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கும் ராஜா, தானும் ஒரு நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வந்திருக்கும் மானு, நான்கு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பில் பளிச்சிடுகிறார். பேச முடியாத குழந்தைகளுடன் இவர் செய்கை பேச்சுக்கள் அருமை.
படம் முழுக்க வரும் நிதின் சத்யா தன் நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். அது முழுமையடையாமல் போயிருப்பது வருத்தம். இவருடன் இணைந்து நடித்திருக்கும் இமான் அண்ணாச்சி காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைக்காமல் ஏமாற்றியிருக்கிறார்.
டீச்சராக வரும் மாளவிகா பொறுப்பான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார். இவர் படம் முழுக்க ஓடிக்கொண்டிருந்தாலும் நடிப்பில் சோர்வு தெரியவில்லை.
ஒரே மாதிரியான நான்கு குழந்தைகள் பார்ப்பது அரிது. அதிலும் இப்படத்தில் காது கேளாமல், பேச முடியாமல் நடித்திருப்பது அருமை. இவர்கள் செய்யும் செய்கைகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன.
நாகாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். சஞ்சய் லேகநாத்தின் ஒளிப்பதிவு அருமை. நான்கு குழந்தைகளை வைத்து கதை அமைத்த இயக்குனர் குரு ரமேஷிற்கு பெரிய கைதட்டலும் பாராட்டும் கொடுக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் கிளைமாக்ஸ் காட்சி ஏற்கும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ விறுவிறுப்பு குறைவு.
No comments: