காதலியின் தாய், தந்தை, பாட்டி அடித்துக்கொலை ஏன்?:மிஸ்டு கால் காதலன் பகீர் வாக்குமூலம்
கூடலுார்:ஊட்டி அருகே, காதலியின் பெற்றோர் உள்பட மூவரை, இரும்புக் கம்பியால் அடித்துக்கொன்ற கேரள வாலிபர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது தாக்குதலில் பலத்த காயமடைந்த காதலி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், ஒவேலி பாரதிநகர் அருகேயுள்ள, மணிமட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய், 50. இவரது மகள் ஜோஸ்னா, 22. கேரளா மாநிலம், சுல்தான்பத்தேரி அருகே, மீனங்காடியிலுள்ள கல்லுாரியில் ஓட்டல் நிர்வாகம் படித்தார்.
அப்போது, மீனங்காடியைச் சேர்ந்த லெனின்,27, என்பவருடன், மொபைல் போனில் வந்த மிஸ்டு கால் மூலம் காதல் மலர்ந்தது. படிப்பை முடித்த ஜோஸ்னா, எர்ணாக்குளத்தில் பணியாற்றினார்.
பின்னாளில், லெனின் நடவடிக்கை பிடிக்காமல், ஜோஸ்னா, திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இதனால், பிரச்னை ஏற்பட்டது.
கடந்த ஏப்ரலில் துபாய் சென்ற ஜோஸ்னா, மே மாதம் இந்தியா திரும்பி சென்னையில் தங்கினார். இதற்கிடையே, இவரது பெற்றோர், மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இரண்டு வாரங்களுக்குமுன், கூடலுார் வந்த ஜோஸ்னா பெற்றோருடன் தங்கினார்.இதையறிந்த லெனின், நேற்று முன்தினம் இரவு, ஜோஸ்னா வீட்டுக்கு வந்தார்.
என்னை புறக்கணித்துவிட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ள எப்படி முடிவெடுத்தாய்' எனக்கேட்டு தகராறு செய்தார்; வாக்குவாதம் முற்றியது.ஆத்திரமடைந்த லெனின், அங்கிருந்த இரும்பு கம்பியால், ஜோஸ்னா, அவரது தந்தை ஜோய், தாய் கிரிஜா, 48, பாட்டி சின்னம்மா,68, ஆகியோரை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பினார். கிரிஜா, சின்னம்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜோய் இறந்தார். ஜோஸ்னா, ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி., திருமேணி தலைமையில், விசாரணை நடத்தி, லெனினை கைது செய்தனர்.
இவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், காதலி குடும்பத்துக்கு நிறைய செலவளித்தேன். தற்போது, என்னை வெறுத்துவிட்டு, வேறு மாப்பிள்ளை பார்த்ததால் அடித்து கொன்றேன் என, தெரிவித்துள்ளார். இவரிடம் தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
தொடரும் ரத்தவெறி கொலைகள்:கடந்த ௨௦௧௧ல், கூடலுார், ஒவேலி சூண்டி அருகே, இரண்டு பெண்கள், ஒரு குழந்தையை, உறவினர் ஒருவர், முன் விரோதம் காரணமாக, சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
கடந்த பிப்.,23-ல், கூடலுார் மண்வயல் அருகே, திபு என்ற இளைஞர் தன் சித்தி மற்றும் அவரது இரு குழந்தைகளை கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இதற்கு பழிவாங்க, இறந்த பெண்ணின் கணவர், திபுவின் அப்பா, அம்மா, மகனை வெட்டி கொலை செய்தார். கடந்த பிப்.,23ல், கூடலுார் தொரப்பள்ளி அருகே, ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒருவர், தனது இரு பெண் குழந்தைகளை, போதையில் அடித்து கொலை செய்தார்.
மேற்கண்ட கொலை வழக்குகளில், குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட போதிலும், தொடரும் கொடூர கொலைகளால், கூடலுார் மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
No comments: