ஐ, விஸ்வரூபம்-2 படங்கள் வெளிவருவதில் சிக்கலா?
பல பெரிய பட்ஜெட் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து, நம்பர் 1 படநிறுவனமாக விளங்கி வரும் ஆஸ்கார் பிலிம்ஸ் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ஐ, ஜெயம் ரவி நடிக்கும் பூலோகம், ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. அதோடு, கமல் நடிக்கும் விஸ்வரூபம்-2 படத்தையும் பல கோடி செலவில் தயாரித்து வருகிறது ஆஸ்கார் பிலிம்ஸ்.
இந்தப் பட்டியலில் உள்ள எந்த படமும் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஐ மற்றும் விஸ்வரூபம்-2 படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்த பூலோகம் படமோ படப்பிடிப்பு முடிவடைந்தும் மாதக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. ஜெய் நஸ்ரியா நடிப்பில் தயாரான திருமணம் எனும் நிக்காஹ் படம் காப்பி ரெடியாகி வருடக்கணக்கில் கிடக்கிறது. இப்படத்தை கடந்த மாதம் வெளியிட முயற்சி செய்தார் தயாரிப்பாளர். வரிவிலக்கு தொடர்பான பிரச்சனை காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார். தற்போது வழக்கில் சிக்கிக் கொண்டுவிட்டது அந்தப்படம்.
இந்நிலையில், ஆஸ்கார் பிலிம்ஸுக்கு பிரபல வங்கி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் அடிபடுகிறது. ஐ, விஸ்வரூபம்-2 படங்களின் பேரில் அந்த வங்கியில் பல ஆயிரம் கோடி வாங்கினாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி. கடன் வாங்கியபோது 2014 ஜனவரியில் விஸ்வரூபம்-2 ரிலீஸ் என்றும், 2014 ஏப்ரலில் ஐ படம் ரிலீஸ் என்றும் சொன்னாராம். அவர் சொன்னபடி இரண்டு படங்களுமே ரிலீஸ் ஆகவில்லை. எனவே பணத்தை திரும்ப செலுத்தினால் தான் ஐ, விஸ்வரூபம்-2 உட்பட ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களை ரிலீஸ் பண்ண முடியும் என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். பணத்தை செலுத்தாதவரை மேற்கண்ட நான்கு படங்களையும் வெளியிட முடியாதபடி வங்கி தரப்பிலிருந்து தடை ஆணை வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
No comments: