சீனியர் மாணவியின் 'ராகிங்' கொடுமை: மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை
போரூர்: போரூர் தனியார் மருத்துவ கல்லூரியில், 'ராகிங்' கொடுமையால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அலட்சியம்:
காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர், யோகலட்சுமி, 19. அவர், போரூர் தனியார் மருத்துவ கல்லூரியில், பி.எஸ்.சி.-இ.டி.சி.டி., எனப்படும், அவசர சிகிச்சை தொடர்பான படிப்பை படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு, படித்து வந்த, யோகலட்சுமியை, மூன்றாம் ஆண்டு படிக்கும், கோடீஸ்வரி என்ற மாணவி 'ராகிங்' செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தனது பெற்றோரிடம் யோகலட்சுமி தெரிவித்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் பலமுறை புகார் கூறியும், கல்லூரி நிர்வாகம் விசாரிக்காமல், அலட்சியத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்:
இந்த நிலையில், 'ராகிங்' சித்ரவதையை பொறுக்க முடியாமல், நேற்று முன்தினம், யோகலட்சுமி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், தனது மரணத்துக்கு, மூத்த மாணவி, கோடீஸ்வரியே காரணம் என, டைரியில் வாக்குமூலமாகவும், எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து, யோகலட்சுமியின் தந்தை கமலக்கண்ணன் அளித்த புகாரை யடுத்து, போரூர் போலீசார், திருப்பூரை சேர்ந்த மாணவி கோடீஸ்வரியை கைது செய்தனர். யோகலட்சுமியின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேதபரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
No comments: