கடைசி ஓவரில் இலங்கை வெற்றி * இங்கிலாந்து ஏமாற்றம்
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரின் போராட்டம் வீணானது. அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி 2–1 என முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சங்ககரா அபாரம்:
இலங்கை அணிக்கு குசால் பெரேரா (17) ஏமாற்றினார். பின் இணைந்த தில்ஷன், சங்ககரா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. இரண்டாவது விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்த போது தில்ஷன் (71) அவுட்டானார். அடுத்து வந்த மகிளா ஜெயவர்தனா (7) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய சங்ககரா, லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இவர், 104 பந்தில் 112 ரன்கள் (14 பவுண்டரி) எடுத்து வௌியேறினார். கேப்டன் மாத்யூஸ் (30) பெரிய அளவில் சோபிக்கவில்லை. திரிமான்னே (16), பிரியன்ஜன் (9), குலசேகரா (0), செனநாயகே (12) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.
இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் ஹாரி கர்னே 4, ஆண்டர்சன், ஜோர்டன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பட்டலர் சதம்:
கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலெஸ்டர் குக் (1), இயான் பெல் (7) ஏமாற்றினர். அடுத்து வந்த கேரி பாலன்ஸ் (42), ஜோ ரூட் (43) ஆறுதல் தந்தனர். இயான் மார்கன் (12) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரவி போபரா (51) அரைசதம் அடித்தார். மறுமுனையில் அசத்திய ஜாஸ் பட்லர், 61 பந்தில் சதம் அடித்தார்.
மலிங்கா மிரட்டல்:
கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டன. மலிங்கா வீசிய 50வது ஓவரின் முதல் பந்தில் பட்லர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஜோர்டன் (5) அவுட்டானார். மூன்றாவது பந்தில் 2 ரன் எடுத்த பட்லர் (112), நான்காவது பந்தில் ‘ரன்–அவுட்’ ஆனார். கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 293 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. டிரட்வெல் (1) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் மலிங்கா 3, அஜந்தா மெண்டிஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2–2 என சமநிலை வகிக்கிறது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி, பர்மிங்காமில் நாளை நடக்கிறது. ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் வென்றார்.
அதிவேக சதம்
நேற்று அபாரமாக ஆடிய ஜாஸ் பட்லர், 61 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, 2005ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கெவின் பீட்டர்சன் 69 பந்தில் சதம் அடித்தது சாதனையாக இருந்தது.
No comments: