உன் சமையலறையில் - சினிமா விமர்சனம்
நடுத்தர வயதில் காதல் சமைக்கும் இருவரின் மன சஞ்சலங்களே... 'உன் சமையலறையில்’!
காதல் தோல்வியால் திருமணம் செய்துகொள்ளாத பிரகாஷ்ராஜ், ஜாதக வில்லங்கங்களால் திருமணம் தள்ளிப்போன சினேகா... இருவரிடையே சிநேகம் பூக்கிறது. உணவுப் பிரியர்களான இருவரின் ரசனை அலைவரிசையும் ஒரே டியூன் அடிக்க, மௌனமாகக் காதல் பூக்கிறது. சந்திக்க முடிவு எடுக்கிறார்கள். ஆனால், தாழ்வுமனப்பான்மையால் இருவருமே தங்களுக்குப் பதில் வேறு ஒருவரை அனுப்பிவைக்க, அது உண்டாக்கும் குழப்பங்களும் தடுமாற்றங்களுமே கதை!
மலையாள ஹிட் 'சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை தமிழில் பரிமாறியிருக்கிறார் இயக்குநர் ப்ளஸ் ஹீரோ பிரகாஷ்ராஜ். தமிழகத்தின் விசேஷ உணவுகளை, பார்வைப் பந்திவைக்கும் டைட்டில் கார்டே அத்தனை அலாதி. ஒவ்வோர் உணவையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என 'பசி ருசி’ ஏற்படுத்துகிறதே டைட்டில்!
பெண் பார்க்கப் போகும் இடத்தில் 'நான் சாப்பிட்டுக்கிட்டா?’ என்று கேட்டு, வடையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவதும், 'யார் சமைச்சது?’ என்று கேட்டு, சமையல்காரர் தம்பி ராமையாவைக் கையோடு வீட்டுக்கு பேக்கப் பண்ணுவதுமாக செம ஜாலி பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ். மறுபக்கம் நடுத்தர வயது தனிமைத் துயர் உணர்வுகளையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்.
சினேகாவின் நடிப்பில் எத்தனை வைபரேஷன் ரியாக்ஷன்? 'வயசு ஆயிட்டுத்தான் போகுது... அதுக்காக போறவன் வர்றவன்ட்ட என்னைக் கல்யாணம் பண் ணிக்கோனு பிச்சையா எடுக்க முடியும்’ என்று கலங்கும்போதும், 'எனக்கு அந்த கேக்கோட ரெசிப்பி சொல்றீங்களா?’ என்று குழந்தையின் குதூகலத்தோடு கேட்பதுமாக வசீகரிக்கிறார்.
' 'வீட்டைவிட்டு ஓடிப்போடா’னு சொல்லுங்க... போயிடறேன். ஆனா, என் சமையலை மட்டும் குறை சொல்லாதீங்க’ எனச் சிணுங்கும் தம்பி ராமையா, பிரகாஷ்ராஜோடு சதா மல்லுக்கட்டும் குமரவேல் இருவரும் தோன்றும் இடங்கள் எல்லாம் அசத்தல்.
அறிமுகம் தேஜஸ்-சம்யுக்தா இடையிலான காதல் காட்சிகள் செம எனர்ஜி. ஆனால், படத்தின் மையப் பகுதியை ஆக்கிரமிக்கும் அதன் நீளம்... அலெர்ஜி. ஆதிவாசி ஒருவரைப் பாதுகாக்க முனையும்போது, 'ஏதோ நல்ல விஷயம் சொல்லப்போறாங்க’ என்று எதிர்பார்ப்பு உண்டாக்குகிறது. ஆனால், அத்தனை பில்ட்-அப்புக்கு இறுதியில் ஒன்றுமே இல்லையே!
''தனியா இருக்கும்போது சந்தோஷமா இருந்தேன். இப்போ பயமா இருக்கு!'', ''அவளை உனக்குப் பிடிச்சிருக்குங்கிற முடிவை நீ எடு. அவளுக்கு உன்னைப் பிடிக்காதுங்கிறதை அவளே எடுக்கட்டும்'' என செழுமையான வசனங்கள் அளிக்கிறது விஜி, ஞானவேல் கூட்டணி. பெரும் சம்பவங்கள் அற்ற படத்தையும் தேங்கவிடாமல் நகர்த்திச் செல்வதில், இசைஞானியின் பின்னணி இசைக்குப் பெரும் பங்கு. 'இந்தப் பொறப்புதான்’, 'ஈரமாய் ஈரமாய்...’ பாடல்கள் ஒன்ஸ்மோர்.
ஆரம்பத்தில் 'பின்னப்போறாங்க’ என்று எதிர்பார்க்கவைப்பவர்கள், போகப் போக 'ஏதோ பண்றாங்கப்பா’ என்று வேடிக்கை பார்க்க வைப்பதுதான் மைனஸ்.
ரசித்தால்... ருசிக்கலாம்!
No comments: